நைஜீரியாவில் தேவாலயம் ஒன்றில் துப்பாக்கிச் சூடு- 50 பேர் உயிரிழப்பு

நைஜீரியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஓவோ நகரில் செயின்ட் பிரான்சிஸ் கத்தோலிக்க தேவாலயத்தில் நேற்று ஞாயிற்றுக் கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஏராளமான கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த போது திடீரென அங்கு நுழைந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கி ஏந்தியவர்கள் தேவாலய கட்டிடத்திற்கு வெளியேயும் உள்ளேயும் இருந்தவர்களை நோக்கி சுட்டதாக ஓண்டோ மாநில காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்: இம்ரான்கான் கைது செய்யப்படுவார்- பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் தகவல் இந்த தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்ட மிகப்பெரிய படுகொலை என்று, ஒண்டோ மாநில ஆளுநர் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நடந்த இடத்தையும், காயமடைந்தவர்களையும் அவர் பார்வையிட்டார். தாக்குதல் நடத்தியவர்கள் அடையாளம் காணப்படவில்லை என்றும், அவர்களது நோக்கம் உடனடியாகத் தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனினும் இந்த தாக்குதலில் தேவாலய பாதிரியார் மற்றும் திருச்சபையைச் சேர்ந்த பாதிரியார்கள் காயமின்றி உயிர் பிழைத்தனர். தேவாலயத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நைஜீரியா அதிபர் முஹம்மது புஹாரி கண்டனம் தெரிவித்தார். இது கொடூரமானது என அவர் குறிப்பிட்டார்.



