பயன்படுத்தப்படாத காணிகளில் உணவுப் பயிர்களைப் பயிரிடுவதற்கான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை!

பயன்படுத்தப்படாத காணிகளை கண்டறிந்து உணவுப் பயிர்களை பயிரிடுவதற்கான துரித வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனைத்து தோட்ட நிறுவனங்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.
தோட்டக் கம்பனிகள் 9,000 ஹெக்டேர்களுக்கும் அதிகமான பயிரிடப்படாத நிலத்தை வைத்துள்ளனர். 23 கம்பனிகளுக்குச் சொந்தமான அந்த தோட்டங்களில் பயிர்ச்செய்கைக்கு ஏற்ற பயிர்களை இனங்கண்டு அவற்றை நடவு செய்பவர்களுக்கு வழங்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
பெருந்தோட்டத்துறை எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
தேயிலை ஏற்றுமதியில் நாட்டிற்குக் கிடைக்கும் அந்நியச் செலாவணி வெளிப்படைத் தன்மையுடன் பேணப்பட வேண்டும். தேயிலை ஏலத்தை டொலரில் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து உடனடியாக ஆராயப்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார்.
தோட்டத் துறையில் தொழிற்சாலைகள் மற்றும் ஏனைய தேவைகளுக்கு முறையான எரிபொருள் விநியோகத் திட்டத்தின் அவசியம் குறித்து கலந்துரையாடப்பட்டது. அமைச்சு அல்லது பிரதேச செயலாளரின் பரிந்துரையுடன் தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு நியமிக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருளை விடுவிப்பதற்கு முன்னுரிமை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
தேயிலை, ரப்பர், தென்னை மற்றும் ஏற்றுமதி பயிர்களுக்கு வரலாற்றில் இல்லாத அளவுக்கு விவசாயிகள் தற்போது அதிக விலையை பெற்று வருகின்றனர்.



