இளநீர் வியாபாரியின் தலையில் துப்பாக்கிச் சூடு: பொலிஸார் தீவிர விசாரணை

அளுத்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரகல்ல மருதானை வீதியில் இன்று (3) லொறியில் வந்த ஒருவர் இளநீர் விற்பனையாளரை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் பேருவளை, சுங்க வீதி, பரண கடே பகுதியைச் சேர்ந்த 47 வயதான கயான் சமிந்த பெர்னாண்டோ என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் திசையில் உள்ள சுமார் 20 இடங்களில் பாதுகாப்பு கேமராக்கள் ஆய்வு செய்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காலை 8.30 மணியளவில் மொரகல்ல பிரதேசத்தில் உள்ள ஆலயமொன்றுக்கு அருகாமையில் லொறியில் ஏற முற்பட்ட வேளையில் அவர் தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தனிப்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கிச்சூடு நடந்ததா என பல குழுக்கள் விசாரணை நடத்தி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் பேருவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், நீதவான் விசாரணைகளின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக களுத்துறை நாகொட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
துப்பாக்கிச் சூடு தொடர்பாக இளநீர் வாங்கிய பெண் ஒருவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.



