சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவின் மூலம் இலங்கையை காப்பாற்ற முடியாது - மக்கள் விடுதலை முன்னணி!

இலங்கை போன்ற ஒரு சிறிய நாடு சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவின் மூலம் ஸ்திரப்படுத்த முடியாது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், பிமல் ரத்நாயக்க, தற்போதைய நிர்வாகத்தின் கீழ் இலங்கை அனைத்து துறைகளிலும் முடங்கும் என எச்சரித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவின் மூலம் எந்தவொரு நாடும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆர்ஜென்டினா பல வளங்களைக் கொண்ட ஒரு பரந்த நாடு, எனினும், 1998 முதல் ஒன்பது முறை நாணய நிதியத்தின் ஆதரவைக் கோரியதோடு கல்லறைகளைக்கூட விற்பனை செய்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு 13 ஆண்டுகளுக்குப் பின்னர் கிரீஸ் பொருளாதார மந்தநிலையில் இருந்து வெளியே வந்ததாகக் குறிப்பிட்ட அவர், தனிநபர் வருமானத்துடன் ஒப்பிடுகையில் நாட்டின் தனிநபர் கடன் தொகை அதிகமாக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிரீஸ் தனது அனைத்து வளங்களையும் விற்பனை செய்ததாகவும், இலங்கைக்கும் இதேபோன்ற விதி ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அனைத்து சொத்துக்களும் விற்கப்படும் நிலையில் அடுத்த 20 ஆண்டுகளில் இலங்கை தொடர்ந்து நிலைத்திருக்க போராடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உற்பத்தி பொருளாதாரம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும், அதே நேரத்தில் அதன் பலன்கள் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
ஊழலற்ற, தொழில்நுட்ப ரீதியாக பொருளாதாரத் திட்டத்தை நாட்டிற்கு உருவாக்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.



