உக்ரைனுக்கு 375 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவி வழங்கும் இங்கிலாந்து

உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி தாக்குதலை தொடங்கியது. தற்போது வரை அந்நாட்டில் போர் நீடித்து வரும் நிலையில், இருதரப்பிலும் அதிக அளவில் உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் லட்சக்கணக்கான உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக தப்பிச் சென்றுள்ளனர்.
உக்ரைன் மீதான போரை நிறுத்துமாறு இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் ரஷியாவை வலியுறுத்தி வருகின்றன. மேலும் ரஷியாவின் இந்த போர் நடவடிக்கையை கண்டித்து அந்நாட்டுக்கு எதிராக வரலாறு காணாத அளவிலான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. போரில் நேரடியாக பங்கேற்காமல் இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு தேவையான ராணுவம் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கி வருகின்றன.
அந்த வகையில் உக்ரைனுக்கு மேலும் ராணுவ உதவிகள் வழங்குவது குறித்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். உக்ரைன் நாடாளுமன்றத்தில் காணொலி காட்சி மூலம் உரையாற்றிய அவர், கொடூர ஆக்கிரமிப்பாளரை எதிர்த்து நிற்கும் உக்ரைனுக்கு இது சிறந்த தருணம் என்று கூறினார்.
இதனை தொடர்ந்து உக்ரைனுக்கு இங்கிலாந்து அரசு மேலும் 375 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 2 ஆயிரத்து 800 கோடி ரூபாய்) மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்க உள்ளதாக அவர் அறிவித்தார்.



