பினாங்கு தடுப்புக்காவலிலிருந்து 500கும் மேற்பட்டோர் தப்பியோட்டம் - ஆறு பேர் உயிரிழப்பு

மலேசியாவின் பினாங்கில் உள்ள குடிநுழைவு தடுப்புக்காவல் நிலையம் ஒன்றில் இருந்த மியன்மாரைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா கைதிகள் புதன்கிழமை (ஏப்ரல் 20) தப்பி ஓடினர். அந்தச் சம்பவத்தில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்தனர்.
ரோஹிங்கியா கைதிகள் 528 பேர், பினாங்கு-கெடா மாநில எல்லையில் இரு பக்கமும் அமைந்துள்ள அந்த நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 4.30 மணிக்குத் தப்பி ஓடியதாக மலேசிய குடிநுழைவுத் துறை தெரிவித்தது.
அந்தச் சம்பவத்துக்கான காரணம் பற்றி புலன் விசாரணை நடந்துவருவதாகவும் அது கூறியது. அதேவேளையில், கைதிகள் தப்பி ஓடிய சம்பவத்துக்கு ஓர் ஆர்ப்பாட்டம் காரணம் என்றும் அந்த ஆர்ப்பாட்டம் திடீரென்று கலவரமாக மாறியதாகவும் ‘தி ஸ்டார்’ தெரிவித்தது.
அச்சம்பவத்தின்போது அந்த நிலையத்தின் முக்கிய வாயில் கதவை கைதிகள் உடைத்தனர். கம்பித் தடுப்புகளையும் அவர்கள் பெயர்த்துத் தள்ளினர் என்று குடிநுழைவு தலைமை இயக்குநர் கைருல் ஸய்மி தாவூத் கூறினார்.
இதனிடையே, தப்பி ஓடியவர்களில் 391 பேரை அதிகாரிகள் மீண்டும் கைது செய்துவிட்டதாகவும் அவர்களில் குறைந்தபட்சம் ஆறு பேர் மாண்டுவிட்டதாகவும் கெடா மாநில காவல்துறை ஆணையர் வான் ஹசான் அகம்மது கூறினார்.
தப்பிவிட்ட 131 பேரைக் பிடிக்க வேட்டை தொடங்கி இருக்கிறது. இதற்காக இந்த இரண்டு மாநிலங்களிலும் 13 இடங்களில் சாலைத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன என்று காவல்துறை குறிப்பிட்டது.
அந்த நிலையத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் பினாங்கில் உள்ள ஜாவி என்ற நகரில் அதிக வாகனங்கள் செல்லும் சாலையில் குறுக்கே புகுந்து ஓடியபோது அந்த ஆறு பேரும் வாகனங்களில் அடிபட்டு உயிரிழந்ததாக ஆணையர் வான் ஹசான் தெரிவித்தார்.
மாண்டவர்களில் ஒரு சிறுவனும் ஒரு சிறுமியும் அடங்குவர். சம்பவம் நிகழ்ந்தபோது நிலையத்தில் 137 சிறார்கள் உட்பட மொத்தம் 664 பேர் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
மியன்மாரில் நடந்த மூர்க்கமான இன வன்செயல்களிலிருந்து தப்பிக்க ரோஹிங்கியா அகதிகள் பல நாடுகளுக்கும் சட்டவிரோதமாக தப்பி ஓடினர்.
அவர்களில் பலரும் லங்காவித் தீவு வழியாக மலேசியாவுக்குள் நுழைந்தனர். அகதிகளை அங்கீகரிக்காத மலேசியா, ரோஹிங்கியா அகதிகளைச் சட்டவிரோத குடியேறிகளாகக் கருதுகிறது.



