கொரோனா பரவல் அதிகரிப்பால் ஷாங்காய் நகரில் நீடிக்கும் ஊரடங்கு
இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா பாதிப்பின் தீவிரம் குறைந்துள்ளது. ஆனால், சீனாவில் இதற்கு நேர்எதிராக ஒமைக்ரான் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில் சீனாவின் ஷாங்காய் நகரில், ஒரு சில பகுதிகளில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்ததால் அங்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஷாங்காய் நகரில் கடந்த மாதம் கொரோனா பாதிப்புகள் கட்டுக்கடங்காமல் அதிகரித்தன. இதையடுத்து இம்மாதம் தொடக்கம் முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. வருமான இழப்பு மற்றும் உணவு தட்டுப்பாடால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட போதும், நகரின் பல்வேறு பகுதிகளில் எவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லாத நிலை ஏற்பட்டது.
இதனால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். மேலும், டெஸ்லா உள்பட ஏராளமான தொழிற்சாலைகள் மீண்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், ஒரு சில பகுதிகளில் கொரோனா பாதிப்புகள் சற்று அதிகரித்ததால், முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக சீனாவின் பொருளாதார மையம் ஆக திகழ கூடிய, வணிக மற்றும் நிதி தலைநகராக விளங்கும் ஷாங்காய் மாநகரில், கடந்த 3 வாரங்களாக பொதுமுடக்கம் அமலில் உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் வாகனத் தொழில் கடும் இழப்பை சந்தித்துள்ளது. இது சர்வதேச நிறுவங்களுக்கு பெரும் அடியை ஏற்படுத்தியுள்ளன.



