சுயேச்சைக் குழுவாக அங்கீகரிக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை!

தங்களை தனி எதிரணியாக அங்கீகரிக்குமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் 41 சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆளும் கட்சியிலிருந்து விலகி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 11 கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கும் இடையில் இன்று முற்பகல் இடம்பெற்ற சந்திப்பின் போதே, அவர்கள் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.
தம்மை தனியான சுயேச்சைக் குழுவாக அங்கீகரிக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கும் வகையில் இன்றைய கலந்துரையாடல் இடம்பெற்றதாக பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
குழுவை எதிர்க்கட்சியில் அமர அனுமதிக்குமாறு எம்.பி.க்கள் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, மற்றும் வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட அரசாங்கத்தின் 11 அங்கத்துவக் கட்சிகளைச் சேர்ந்த 17 பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 12 பாராளுமன்ற உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் 2 பாராளுமன்ற உறுப்பினர்களும் இதில் அடங்குவர்.
113 ஆசனங்களுடன் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைக் காட்டும் எந்தவொரு குழுவிற்கும் அரசாங்கத்தை அமைப்பதற்கான அதிகாரத்தை வழங்கத் தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்ததை அடுத்து, சுயாதீனமாகச் செயற்படுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.
ஜனாதிபதி மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிராக பொதுமக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த ஆரம்பித்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.



