அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கொண்டு செல்வதற்காக புதிய அமைச்சரவை நியமனம்!

அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கொண்டு செல்வதற்காக புதிய அமைச்சரவை நாளை(18) நியமிக்கப்படுமென தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், அரசாங்கத்தில் இருந்துகொண்டு அரசாங்கத்தை பலவீனப்படுத்தியவர்களை மீண்டும் ஒன்றிணைத்து அமைக்கும் இடைக்கால அரசாங்கத்தின் ஸ்திர தன்மை மீது நம்பிக்கை கொள்ளமுடியாதெனவும், பொதுஜன பெரமுன தலைமையிலான அமைச்சரவையே ஸ்தாபிக்கப்படுமென சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துக்கு துரோகம் இழைத்த தரப்பினருடன் மீண்டும் ஒன்றிணைவதற்கு பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாகவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் மறுசீரமைக்கப்பட்ட அமைச்சரவையை ஸ்தாபிக்க வேண்டுமெனவும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
அரசியல் மற்றும் சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள நெருக்கடி நிலைக்கு எதிர்வரும் வாரமளவில் சிறந்த தீர்வை பெற்றுக்கொள்ளமுடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.



