அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன் - டொனால்ட் டிரம்ப் அதிரடி

அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் மீண்டும் போட்டியிடலாம் என முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். எனினும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இதுவரை வரவில்லை.
அமெரிக்காவின் வடக்கு கரோலினாவின் செல்மாவில் நேற்று நடைபெற்ற பேரணியில், முன்னாள் அதிபர் டிரம்ப் கலந்து கொண்டார். அப்போது அவர் தனது ஆதரவாளர்களிடம் பேசும்போது, “நான் 2 முறை போட்டியிட்டேன். 2 முறையும் வென்றேன். நான் முதல் முறை செய்ததை விட இரண்டாவது முறை சிறப்பாக செய்தேன்.
இப்போது, நாம் அதை மீண்டும் செய்ய வேண்டியிருக்கலாம். நான் மீண்டும் போட்டியிடுதை பார்க்க விரும்பும் யாராவது இங்கு இருக்கிறார்களா?" என்று கேட்டார்.
மேலும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் மீது டிரம்ப் குற்றம் சாட்டினார்.
“ஜோ பைடனின் நிர்வாகம் ஒன்றின் பின் ஒன்றாக அவமானகரமான முறையில் சரணடைந்து வருகிறது.
எனது நிர்வாகத்தின் கீழ் ரஷியா தனது சிறப்பு ராணுவ நடவடிக்கையை உக்ரைனில் தொடங்கியிருக்காது. அமெரிக்கா வலுவான அணுசக்தி திறன்களைக் கொண்டுள்ளது" என்றார்.
நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, “நான் இன்னும் அதிபராக இருந்திருந்தால், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களைக் கொண்டு ரஷியாவை அச்சுறுத்தியிருப்பேன்” என்றார்.
இதற்கிடையே, இம்மாதம் முற்பகுதியில் ‘தி ஹில்ஸ்’ நடத்திய கருத்துக்கணிப்பில், 2024ம் ஆண்டிற்கான பொதுத்தேர்தலில், தற்போதைய அதிபர் பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோரை காட்டிலும், டொனால்டு டிரம்ப் முன்னிலையில் உள்ளார் என்று சுட்டிக்காட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



