இன்று புதிய அமைச்சரவை நியமனம்! – ஜனாதிபதி அதிரடி தீர்மானம்

அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கையை பாதியாக குறைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளது.
இதன்படி, இதுவரையில் அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்ட எம்.பி.க்கள் பலருக்கு அமைச்சுப் பதவிகள் பறிபோவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் இராஜினாமாவை அடுத்து அந்த பதவிக்கு நியமிக்கப்பட்ட முன்னாள் நீதி அமைச்சர் அலி சப்ரியும் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளார். எனினும், அந்த ராஜினாமாவை ஜனாதிபதி இன்னும் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் முடியும் வரை அலி சப்ரியை அமைச்சுப் பதவியில் நீடிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
புதிய நிதியமைச்சராக முன்னாள் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன நியமிக்கப்படவுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள போதிலும், இது பொய்யான செய்தி என அந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.
இதனிடையே, புதிய மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சராக முன்னாள் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி நியமிக்கப்படவுள்ளார். மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சை இணைத்து அமைச்சர் பதவியொன்றை உருவாக்குவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் நியமனம் தொடர்பான கலந்துரையாடல்கள் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (7ம் திகதி) இரவு வரை இடம்பெற்றது. அமைச்சரவை இராஜினாமா செய்து இன்றுடன் 6 நாட்கள் கடந்துவிட்டன.
தற்போது நெடுஞ்சாலைகள், கல்வித்துறை மற்றும் வெளியுறவுத்துறைக்கு மட்டுமே அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



