வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையிலும் வரி கோருகின்றனர்! விசனம் தெரிவிக்கும் மக்கள்

நாட்டின் இக்கட்டான சூழ்நிலைகளை கவனத்திற்கொள்ளாது, இறைவரித் திணைக்களத்தின் கிழக்கு மாகாண காரியாலயத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் நடமாடும் சேவைகள் மூலமாக தாம் பல்வேறு இன்னல்களைத் தினம் சந்தித்து வருவதாக, பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நாட்டில் நிரந்தர மின்சாரமின்மை, எரிபொருள் பிரச்சினைகள், அன்றாட வாழ்வியலில் பொதுமக்கள் சந்திக்கும் சிக்கல்கள் காரணமாக அனேக பொதுமக்களின் வாழ்வாதாரம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
விலைவாசி உயர்வுகள், பொருள்களின் தட்டுப்பாடு மற்றும் தொழிலில்லா நிலைகள் உள்ள இந்தக் காலகட்டத்திலும் கிழக்கு மாகாண இறைவரி திணைக்களத்தால் வரி அறவிடுதல் எனும் போர்வையில் மனசாட்சிக்கு விரோதமான பல்வேறு நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாக பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும், நாட்டின் பொருளாதரம் முற்றாக வீழ்ந்துள்ள இந்தக் காலகட்டத்தில் இறைவரி அறவிடல்களை செய்து, உள்ளூராட்சி மன்றங்களைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் இறைவரி திணைக்கள அதிகாரிகள், ஏழை மக்களின் பசியையும் வாழ்வாதார நிலைகளையும் கவனத்திற்கொள்ளாது செயற்படுகிறார்கள் என மக்கள் சாடுகின்றனர்.
எனவே, இந்த வரி அறவிடும் வேலைத் திட்டத்தை நாடு சீராகும்வரை பிற்போட நடவடிக்கை எடுக்க, கிழக்கு மாகாண ஆளுநர், பிரதம செயலாளர், இறைவரி திணைக்கள ஆணையாளர் உட்பட உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.



