வாக்காளர்களின் விருப்பத்துக்குரிய வேட்பாளராக இமானுவேல் மக்ரன் அடையாளம் - பிரான்ஸ் தேர்தல் களம்

#Election #France
Prasu
2 years ago
வாக்காளர்களின்  விருப்பத்துக்குரிய வேட்பாளராக இமானுவேல் மக்ரன் அடையாளம் - பிரான்ஸ் தேர்தல் களம்

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் பின்னணியில் பிரான்சில் எதிர்வரும் 10 ஆம் திகதி அரசதலைவர் தேர்தலின் முதற்சுற்று வாக்களிப்பு இடம்பெறவுள்ள நிலையில் பரப்புரைகள் தீவிரமடைந்துள்ளன.

பிரான்சில் அரசதலைவர் தேர்தலின் முதல் சுற்று வாக்கெடுப்புக்கு முன்னதான கருத்துக் கணிப்புகளில் தற்போதைய அரச தலைவரான இமானுவேல் மக்ரன் (Emmanuel Macron )வாக்காளர்களின் முதலாவது விருப்பத்துக்குரிய வேட்பாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

எனினும் இந்த ஆதரவு கடந்த முறையைவிட கடுமையாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு நெருக்கடியால் திசைதிருப்பப்பட்ட அவர், பிரசாரத்தில் தாமதமாக நுழைந்திருந்தார்.

அத்துடன் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது போன்ற வாக்காளர்களின் எதிர்ப்பை சம்பாதிக்கும் பொருளாதார சீர்திருத்தங்களில் அவர் இறுக்கமாக இருப்பதால் அவருக்குரிய ஆதரவு கணிசமாக குறைந்துள்ளதாக கருதப்படுகிறது.

எதிர்வரும் ஞாயிறன்று இடம்பெறவுள்ள வாக்களிப்பானது இமானுவேல் மக்ரன் மற்றும் அதிதீவிர வலதுசாரி வேட்பாளர் மரின் லு பென்  ( Marine Le Pen) இடையே கடந்த 2017 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தலை நினைப்பூட்டியுள்ளது.

முதல் சுற்றில், மக்ரன் 28 வீத வாக்குகளையும், மரின் லு பென் 22 வீத வாக்குகளையும் பெறக்கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது. ஐந்தாண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற இரண்டாம் சுற்றில் மக்ரன், லு பென்னை தோற்கடித்து 66.1 வீத வாக்குகளைப் பெற்று அரச தலைவராகியிருந்தார்.

ஆனால் இந்த முறை இறுதிச்சுற்றில் மக்ரன் 53 வீத வாக்குகளை பெறும் அதேவேளை மரின் லு பென் 47 வீத வாக்குகளைப் பெறுவார் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இந்த எதிர்வு கூறல் மக்ரனின் வெற்றி வீதத்தை கடந்தமுறையை விட மிகக் குறைவாக குறைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.