மீட்கப்பட்ட உக்ரைன் நகரங்களில் பாரிய மனித புதைகுழிகள் கண்டறிவு!

Mayoorikka
2 years ago
மீட்கப்பட்ட உக்ரைன் நகரங்களில் பாரிய மனித புதைகுழிகள் கண்டறிவு!

உக்ரைனில் மிக மோசமான மனிதப் படுகொலைகளில் ரஷ்யப் படைகள் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.

ரஷ்யப் படைகளின் மனிதப் படுகொலைகள், போர்க்குற்றங்கள் தொடர்பில் மேலும் பல ஆதாரங்கள் விரைவில் வெளியாகும் எனவும் அவா் குறிப்பிட்டார்.

இன்று செவ்வாய்க்கிழமை ஐ.நா. பாதுகாப்புச் சபையில் பேசவுள்ள உக்ரேனிய ஜனாதிபதி, அங்கு ரஷ்யாவின் இனப்படுகொலைகள் குறித்தும் தெளிவுபடுத்துவார் எனக் கருதப்படுகிறது.

உக்ரைன் தலைநகர் கிய்வின் வடமேற்கில் உள்ள புச்சாவில் ரஷ்யப் படைகளிடம் இருந்து மீண்டும் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் படுகொலை செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ரஷ்ய படையினரின் போர்க்குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுக்கள் வெளியாகியுள்ளன.

எனினும் பொதுமக்கள் படுகொலை தொடர்பான உக்ரைனின் குற்றச்சாட்டுக்களை ரஷ்யா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது ஆத்திரமூட்டும் குற்றச்சாட்டு. ரஷ்யப் படைகள் போர்க்குற்றங்களிலும் ஈடுபடவில்லை என்பதற்கான ஆதாரங்களை ஐ.நா. பாதுகாப்புச் சபையில் முன்வைக்கவுள்ளதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

எனினும் ரஷ்யா மனிதப் படுகொலைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அது குறித்து சர்வதேச சமூகத்திற்கு விளக்கமளிக்கப்படும் என்றும் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை வெளியிட்ட காணொளி ஒன்றில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.

ரஷ்யப் படைகளிடமிருந்து மீட்கப்பட்ட உக்ரைன் – புச்சா நகரத்தில் பாரிய மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. குறைந்தது 300 பொதுமக்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டார்.

இதேபோன்று ஆக்கிரமிப்பு ரஷ்யப் படைகளால் கைப்பற்றப்பட்ட பல உக்ரேனிய நகரங்களில் மேலும் பலர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம். எனவே இவ்வாறான மனிதப் படுகொலைகளின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று தகவல் உள்ளது எனவும் அவா் கூறினார்