அல்லாஹ் என்றால் யார்?

Keerthi
2 years ago
அல்லாஹ் என்றால் யார்?

படைத்த இறைவனைத்  திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘அல்லாஹ்’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ஏகனாகிய இறைவனைக் குறிக்கும் சொல்லே அல்லாஹ் என்பது. ஆங்கிலத்தில் காட், தமிழில் கடவுள், ஹிந்தியில் பகவான் என்றெல்லாம் குறிப்பிடப்படுவது போல் அரபு மொழியில் கடவுளைக் குறிக்கும் வார்த்தைதான் அல்லாஹ்! எனினும் மற்ற மொழி வார்த்தைகளோடு ஒப்பிடும் போது இவ்வார்த்தைக்கு ஓரிரு தனிச் சிறப்புக்கள் உள்ளன:

இவ்வார்தையின் உண்மைப்பொருள் ‘வணங்குவதற்குத் தகுதி வாய்ந்த ஒரே இறைவன்’ என்பது.
 
இவ்வார்த்தைக்கு ஆண்பால் பெண்பாலும் கிடையாது, பன்மையும் கிடையாது. எப்போதும் இது ஒருமையிலேயே விளங்கும். 
 
உதாரணமாக ஆங்கில வார்த்தை God – Gods , Godess இறைவன் - இறைவி அல்லது கடவுள் – கடவுளர்கள் என்றும் பகவான் – பகவதி என்றும் பன்மைக்கும் பாலுக்கும் ஏற்றவாறு மாறுவதுபோல் அல்லாஹ் என்ற வார்த்தை ஒருபோதும் சிதைவதில்லை. 
 
இப்படிப்பட்ட சிறப்புக்களின் காரணத்தால் உலகெங்கும் முஸ்லிம்கள் இறைவனை அல்லாஹ் என்ற வார்த்தை கொண்டு அழைக்கின்றனர். மாறாக அல்லாஹ் என்றால் அரபு நாட்டுக் கடவுள் என்றோ முஸ்லிம்களின் குலதெய்வம் என்றோ நினைத்து விடாதீர்கள்.
 
அந்த இறைவனைப் பற்றி மனித மனங்களில் எழக்கூடிய சந்தேகங்களுக்கெல்லாம் திருக்குர்ஆன் பதிலளிக்கிறது:

இறைவன் ஒருவனைத்தவிர வேறில்லை 
 
இறைவன் ஒருவன் மட்டுமே என்பது பற்றி நமது பகுத்தறிவு என்ன சொல்கிறது? 
 
ஒரு பள்ளிக்கூடத்திற்கு இரண்டு முதல்வர்கள் அல்லது ஒரு பேருந்துக்கு  இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட ஓட்டுனர்கள் இருந்தால் அது எவ்வாறு பெரும் குழப்பம், கலகம் அல்லது விபத்தில் கொண்டு சேர்க்குமோ அதுபோல இவ்வுலகம் ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் இருந்தால் என்றோ அழிந்துபோய் இருக்கும் எனபதை நமது சாமானிய அறிவு கூட நமக்குச் சொல்கிறது.
 
திருக்குர்ஆனும் இவ்வாறு கூறுகிறது:
 
'(வானம் பூமி ஆகிய) இவற்றில் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்கள் இருந்திருந்தால், நிச்சயமாக இவையிரண்டும் அழிந்தே போயிருக்கும்......' (திருக்குர்ஆன் 21 : 22)
 
இறைவன் ஒருவனே என்பது பற்றியும் அவனது தன்மைகள் பற்றியும் இதோ திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது:
 
நபியே நீர் கூறுவீராக! “அல்லாஹ் அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெற்றெடுக்கவில்லை அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அன்றியும் அவனைப்போல் எவரும் எதுவும் இல்லை.”  (திருக்குர்ஆன் 112: 1-4)
 
அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரியவன், அவனைத் தவிர வேறு நாயன் இல்லை, மறைவானதையும், பகிரங்கமானதையும் அறிபவன், அவனே அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன். 
(திருக்குர்ஆன் 59:22)
 
  அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவர, வேறு யாரும் இல்லை, அவனே பேரரசன், மிகப்பரிசுத்தமானவன், சாந்தியளிப்பவன், தஞ்சமளிப்பவன், பாதுகாப்பவன், (யாவரையும்) மிகைப்பவன், அடக்கியாள்பவன், பெருமைக்குரித்தானவன் - அவர்கள் இணைவைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன். (திருக்குர்ஆன் 59:23)
 
அவன்தான் அல்லாஹ்; படைப்பவன், ஒழுங்குபடுத்தி உண்டாக்குபவன், உருவமளிப்பவன் - அவனுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன, வானங்களிலும், பூமியிலும் உள்ளவையாவும் அவனையே தஸ்பீஹு (செய்து துதி) செய்கின்றன - அவனே (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன். (திருக்குர்ஆன் 59:24)
 
வணக்கத்துக்கு உரியவன் யார்?
 
மனிதர்களே! நீங்கள் உங்களையும்  உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா இறையச்சமும், தூய்மையும் உடையோராகலாம்.  (அல்குர்ஆன்2:21)
அவன்தான் கர்ப்பக் கோளறைகளில் தான் நாடியபடி உங்களை உருவாக்குகின்றான்;. அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை. அவன் யாவரையும் மிகைத்தோனாகவும், விவேகம் மிக்கோனாகவும் இருக்கின்றான். (அல் குர்ஆன்  3:6)
 
இவ்வாறு அனைத்து மனித குலத்துக்கும் பொதுவானவனும் சர்வவல்லமை கொண்டவனும் ஆகிய ஏக இறைவனை மட்டுமே வணங்க வேண்டும் என்று திருக்குர்ஆன் வலியுறுத்துகிறது.