இஸ்லாம் வலியுறுத்தும் கடமைகள்

Prasu
2 years ago
இஸ்லாம் வலியுறுத்தும் கடமைகள்

கல் மனதையும் கரைந்து போகச் செய்து, அதனை இரக்கமுடையதாக மாற்றிடும் தன்மை என்பது, பசியினை உணர்வது கொண்டு நிகழ்வதாகும். அந்த பசியினை அனைவரும் உணர்ந்து தன்னை அறிய வேண்டும் என்பதே அருள்வளம் நிறைந்த ரமலானின் புண்ணிய நோக்கமாகும்.

இறை உணர்வில் ‘தனித்து இரு’, இறைவனுக்கு நன்றி செலுத்தி அவனது அருளைப் பெற விழிப்புடன் ‘விழித்து இரு’, இறைவனை பற்றியும் அவனது வல்லமைகள் குறித்தும் அறிந்து கொள்வதில் ‘பசித்திரு’. (அதில் ஆவல் கொண்டவனாக இரு).

“தனித்திரு-விழித்திரு-பசித்திரு” என்ற மூன்று நிலை பயிற்சிகளையும் செயல்படுத்தி காட்டிட கடமையாக்கப்பட்டது தான் ரமலான் நோன்பாகும். மனிதனின் பாவங்களை எரித்து அழித்து, நன்மைகளை அதிகமாக பெறும் வகையில் ரமலான் நோன்பின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.

மனித வாழ்வியலானது சிறந்தோங்க இஸ்லாம் வலியுறுத்தும் 5 கடமைகளில் 3-வது கடமையாக, நடுநாயகமாக நின்று முந்தைய இரண்டு கடமைகளான கலிமா (ஏகத்துவ உறுதி மொழி), தொழுகை என்ற ஞானப் பயிற்சி இவை இரண்டையும் ஓர்மையுடன் ஒழுங்காக நிறைவேற்றிட ரமலான் நோன்பு துணைபுரிகிறது.

அதுபோன்று இஸ்லாத்தின் பிந்தைய கடமைகளான ஏழைகளுக்கு ஜக்காத் கொடுப்பதற்கும், சகோதர எண்ணத்தை மனதில் வளரச்செய்து ஹஜ் பயணத்தில் ஏற்படும் கஷ்டங்களை பொறுமையுடன் சகித்து எதிர்கொள்ள அடித்தளமிடுவது தான் ரமலான் நோன்பாகும்.

11 மாதங்கள் விரும்பியதை சாப்பிட்டு மகிழ்ந்த மனித மனதை, வருடத்தில் ஒரு மாதம் உடலாலும் மனதாலும் செயலாலும் பசித்திருக்கச் செய்து மனிதனை ஞானப்பக்குவ நிலைக்கு உயர்த்துவது தான் ரமலான் நோன்பாகும்.

சுகபோகங்கள் எல்லாம் தன்னைச் சூழ இருந்த போதிலும் அதனை பகல் பொழுதில் தீண்டாமல் இருந்து, ஐம்புலன்களையும் அடக்கி, அதனை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்ற பயிற்சியினை தருவதும் ரமாலான் நோன்பாகும்.

இது மனித மனங்களில் ஏற்படும் பாவமான எண்ணங்களை எல்லாம் போக்கி, அதனைப் பரிசுத்தப்படுத்திட உதவுகிறது. பிறரின் இன்னல்களை, கஷ்டங்களை புரிந்து கொண்டு உதவுவதற்கும் இந்த ரமலான் நோன்பு துணை செய்கிறது.

பொய்யுரைக்காமல், புறம் பேசாமல், சண்டை சச்சரவில் ஈடுபடாமல் தனது மனோ இச்சைகளை அடக்கி பொறுமையாக நடந்து கொள்ளும் நோன்பாளிகளுக்கு அண்ணல் நபி நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய சுபச் செய்தி இது:

“சொர்கத்தில் ‘ரய்யான்’ என்ற நுழையும் வாசல் உள்ளது, மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். நோன்பாளிகளை தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்”. (நூல்: புகாரி)

ரமலானின் சிறப்பை நாம் உணர்ந்திட வேண்டும் என்பதற்காக நபிகளார் ரமலான் மாதம் தொடங்க இரண்டு மாதங்கள் முன்பிருந்தே இவ்வாறு பிரார்த்தனை புரிய தொடங்கி விடுவார்கள், “யா அல்லாஹ், எங்களுக்கு நீ ரஜப், ஷஅபான் மாதங்களில் ‘பரகத்’ என்ற நல்வளர்ச்சியினை தந்து, ரமலான் மாதத்தை அடைந்திடும் நற்பேற்றினையும் எங்களுக்கு அருள்வாயாக, என்பார்கள்”, (நூல்: புகாரி).

அன்பு, இரக்கம், பிரியம் ஆதரவு, தர்மம், ஒழுக்கம், பண்பாடு, பணிவு இணக்கம், வணக்கம் போன்ற நற்செயல்களை வளர்த்து காமம், பேராசை, போட்டி, பொறாமை, விரோதம், குரோதம், கர்வம் போன்ற கீழான செயல்களை தடுப்பதும் ரமலானின் சிறப்பு அம்சங்கள் ஆகும்.

பாவங்களை எரித்து, அதனை கரித்திடும் ரம்மியம் மிகுந்த ரமலான் நோன்பை கடைப்பிடித்து இறைவனின் பேரன்பை அனைவரும் பெற்றிடுவோம்.