பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அதிரடி: சீமெந்துகளை பதுக்கிய களஞ்சியசாலைக்கு சீல்

சீமெந்து பதுக்கி வைக்கப்பட்டமை உட்பட பொருள்களை அதிக விலைக்கு விற்றமை, காலாவதியான பொருள்களை காட்சிப்படுத்தியமை உட்பட பல குற்றச்சாட்டில் ஈடுபட்ட வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மன்னார் நகர பகுதி மக்களால் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் மன்னார் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், குறித்த அதிகார சபையின் பொறுப்பதிகாரி ஏ.எம். அர்மிஸ் தலைமையில், இன்று காலை திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது குறித்த வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மன்னார் நகர பகுதிகளில் குறிப்பாக சாந்திபுரம், தாராபுரம், தலைமன்னார் பிரதான வீதி பகுதிகளில் இந்த சுநற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதேவேளை, மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி, பெரியகமம் பகுதியில் உரிய அனுமதி பத்திரமின்றி சீமெந்து மூடைகளை பதுக்கி வைக்கப்பட்ட களஞ்சியசாலைக்கும் பாவனையாளர் அபிவிருத்தி அதிகார சபையினர் சீல் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



