கட்டடம் இடிந்து வீழ்ந்து 17 பேர் உயிரிழப்பு 5 பேர் காயம்
விடுதிக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் 17 பேர், சீனாவில் உயிரிழந்துள்ளதுடன், 5 பேர் காயமடைந்துள்ளனர்.
மீட்புக் குழுவினர் மேற்கொண்ட 36 மணி நேர தேடுதல் நடவடிக்கையின் பின்னர் இடிபாடுகளில் இருந்து 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
சீனாவின் கிழக்கே உள்ள ஷூஸு நகரில் உள்ள குறித்த விடுதிக் கட்டடம் இடிவுற்ற போது, அங்கு 23 பேர் இருந்ததாக நம்பப்படுகிறது.
கட்டடத்தை மாற்றி வடிவமைக்கும் உரிமையாளரின் திட்டத்தால் கட்டடம் பலவீனமடைந்து இடிந்து வீழ்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
அண்மையில் அந்த கட்டடம் புதுப்பிக்கப்பட்டதும் தெரிய வந்துள்ளது.
முதலில் மூன்று மாடிகளுடன் கட்டப்பட்ட இந்த கட்டடத்தின் மீது மேலும் பல தளங்கள் கட்டப்பட்டதாக அருகில் குடியிருப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஷுஸுவில் உள்ள சிஜி கையுவான் என்ற இந்த விடுதி கடந்த திங்கட்கிழமை காலை 7 மணியளவில் இடிந்து வீழ்ந்துள்ளது.