சீரற்ற காலநிலையால் ஒருவர் பலி; அதிகமானோர் பாதிப்பு! அபாய எச்சரிக்கை நீடிப்பு...
சீரற்ற காலநிலையால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 2894 குடும்பங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 737 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மண்மேடொன்று சரிந்து விழுந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இருவர் காயங்களுக்கு உள்ளானார்கள். வீடொன்று முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 327 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் இராணுவத்தினரும், கடற்படையினரும் ஈடுபட்டுள்ளனர்.
மழை, இடி, மின்னல், வெள்ளப்பெருக்கு, மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஆகியன மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கொழும்பு, கண்டி, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையே இவ்வாறு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும் களு, களனி, கின், நில்வள கங்கைகளை அண்மித்த மற்றும் இருமருங்கிலும் வசிக்கும் மக்கள் அவதானத்து செயற்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.