2023ல் 28 கோடி பேர் உணவின்றி தவிப்பு - ஐ.நா

#people #UN #Food #report #World
Prasu
1 week ago
2023ல் 28 கோடி பேர் உணவின்றி தவிப்பு - ஐ.நா

உலகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் மக்கள் பட்டினியால் வாடி வருகிறார்கள். இந்தநிலையில் கடந்த ஆண்டில் (2023) 28 கோடி பேர் கடுமையான பட்டினியை எதிர்கொண்டனர் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஐ.நா. உணவு பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 2023-ம் ஆண்டில் உலகம் முழுவதும் உணவு பாதுகாப்பின்மை மோசமடைந்தது. 

சுமார் 28.20 கோடி மக்கள் கடுமையான பட்டினியால் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக போர் சூழல் உள்ள காசா மற்றும் சூடானில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. 

தீவிர வானிலை நிகழ்வுகள் பொருளாதார பாதிப்புகள் உள்ளிட்டவைகளால் கடுமையான உணவு பாதுகாப்பின்மையை எதிர்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. பட்டினியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து 5-வது ஆண்டாக அதிகரித்துள்ளது. 

போர், காலநிலை மற்றும் வாழ்க்கை செலவு நெருக்கடி ஆகியவற்றால் 2023-ம் ஆண்டில் சுமார் 30 கோடி மக்கள் கடுமையான உணவு நெருக்கடியை எதிர்கொண்டனர். 

2022-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2023-ம் ஆண்டில் 2.40 கோடி மக்கள் அதிகரித்துள்ளனர். ஆப்கானிஸ்தான், காங்கோ ஜனநாயக குடியரசு, எத்தியோப்பியா, நைஜீரியா, சிரியா மற்றும் யோமன் ஆகிய நாடுகளில் நீடித்த பெரும் உணவு நெருக்கடிகள் தொடர்கின்றன.