கனடாவைச் சேர்ந்த அகணி சுரேஸ் அவர்களின் நூல்கள், பாடல்கள் அறிமுகவிழா

Kanimoli
1 year ago
கனடாவைச் சேர்ந்த அகணி சுரேஸ் அவர்களின் நூல்கள், பாடல்கள் அறிமுகவிழா

கனடாவைச் சேர்ந்த அகணி சுரேஸ் அவர்களின் நூல்கள், பாடல்கள் அறிமுகவிழா சுவிற்சலாந்து  சூரிச் நகரில் கணித கற்கைநெறி மையம் நிறுவனர் ஆசிரியர் திரு. ச.மகேந்திரன் அவர்களின் தலைமையில் 30.10.2022 மாலை சரியாக 5:10 மணிக்கு  Birmensdorferstrasse 67
8004  Zürich   நூலக மண்டபத்தில் நிறைந்த பார்வையாளர்களோடு மிகவும் சிறப்பாக  நடைபெற்றது. இந்த நிகழ்வில் அகணி சுரேஸ் அவர்களும் கனடாவில் இருந்து  பங்கேற்றிருந்தார்  என்பது குறிப்பிடத்தக்கது. 
மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய இந்த நிகழ்வில் அகணி  சுரேஸ் அவர்கள் கடந்த சில வருடங்களாக வெளியிட்ட ஆறு நூல்கள் பற்றிய கருத்துரைகளும் , அவரின் வரிகளில் உருவான  பாடல் களுக்கான அறிமுகமும் அரங்கில் பார்வையாளர்களின் கரகோசங்கள் ஒலிக்கச் சிறப்பாக நடைபெற்றன. இந்த நிகழ்வில் வரவேற்புரையை செல்வி வித்தியா மகேந்திரன், கணித கற்கைநெறி மையம் வழங்கினார். நிகழ்ச்சி தொகுப்பாளராக  திரு முருகேசன் குமணன் அவர்கள் மிகவும் நேர்த்தியாக நெறிப்படுத்தினார். இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக சுவிஸ் தமிழ் இலக்கிய சங்கத்தின் தலைவர் கலாநிதி கல்லாறு சதீஸ் அவர்கள் கலந்து சிறப்பித்து உரையாற்றினார். அவர் தனது உரையில் கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் 30 வருட காலப் பணிகளையும் அந்த அமைப்பின் முன்னாள் தலைவர்கள் பலரின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களையும் பாராட்டிக் கொண்டதோடு கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தற்காலத் தலைவர் அகணி சுரேஸ் அவர்களின் எழுத்துப் பணிகளைப் பாராட்டி அவருக்கு "நிறைதமிழ்" என்ற விருதினை சுவிஸ் தமிழ் இலக்கியச் சங்கத்தின் சார்பில் வழங்கி மகிழ்ந்தார்.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் தமிழ்ச் சோலை பாடசாலை ஒன்றின் பொறுப்பாளர் திரு சேத்திரபாலன் அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு அகணி சுரேஸ் அவர்களின் "வெகுளாமை" நூல் பற்றிய கருத்துரையையும் வழங்கினார். சுவிஸ் பேர்ண் வள்ளுவர் பாடசாலை நிறுவனரான திரு முருகவேள் பொன்னம்பலம் அவர்கள் வாழ்த்துரை வழங்கியதோடு அகணி சுரேஸ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி பூக்கொத்து வழங்கி சிறப்பும் செய்தார்.  அகணி சுரேஸ் அவர்களின் கதைச்சாரல் நூலிற்கான கருத்துரையை திரு துரைராசா சுரேந்திரன் அவர்களும் , கட்டுரைச் சாரல் நூலிற்கான கருத்துரையை  திருமதி கெளரி பூர்ணராஜன் பாபு அவர்களும், அன்புடைமை நூலிற்கான கருத்துரையை திருமதி கமலினி கதிர் அவர்களும், இன்னும் இருக்கிறது இனிய வாழ்வு நாவலுக்கான கருத்துரையை திரு குடத்தனை உதயன் அவர்களும் , இன்பமுற வாழ்வதற்கு
இலக்கியப் புதையல்கள்  நூலிற்கான கருத்துரையை திரு வடிவேலு அருள்நந்தன் அவர்களும் வழங்கினர். அகணி சுரேஸ் அவர்களின் உறவினர் திருமதி விமலாதேவி ஆறுமுகம் அவர்களும் வாழ்த்துரை வழங்கினார். 

எழுத்தாளர் அகணி சுரேஸ் அவர்களின் ஏற்புரையை அடுத்து நூல்களின் பிரதிகள் பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்டன. விழா இரவு 830மணிக்கு இனிதே நிறைவுற்றது. இந்த நிகழ்விற்கான அனைத்து ஒருங்கமைப்புப் பணிகளையும் கணித கற்கைநெறி மைய நிறுவனர் திரு ச.மகேந்திரன் அவர்களும் , ஆசிரியர் செல்வி வித்யா மகேந்திரன் அவர்களும்  செய்திருந்தார்கள்.