"ஈழத்துச் சிதம்பரம்" அங்கே என்ன விசேடம். ஆய்வுத் தகவல்...

Prasuat year ago

அலைகடல் சூழும் ஈழமணித் திருநாட்டின் தலையெனத் திகழ்வது யாழ்ப்பாணம்.

அதற்கு மேற்காக சுமார் 20கி.மீ தொலைவில் இருக்கும் ஒரு அழகிய சிறிய தீவுதான் காரைநகர்.

இங்கே இரு சிறப்புகள். ஒன்று ஈழத்துச் சிதம்பரம்.அடுத்தது அழகிய ஆழம் குறைந்த கடற்கரையான “கசூரினா பீச்”.

கோவில் என்றால் சிதம்பரம். அந்தச் சிதம்பரத்தில் எவ்வாறு திருவாதிரை உற்சவம் மிக பக்திபூர்வமாகவும் கோலாகலமாகவும் நடைபெறுகிறதோ, அதே போன்று அதன் வழியொத்ததான வழிபாட்டு முறைகள் இந்தச் சிறிய தீவில் இருக்கும் காரைநகர் சிவன் கோவிலிலும் நடைபெறுவதால் இது ஈழத்துச் சிதம்பரம் என அழைக்கப்படலாயிற்று.

தொண்மையும் வரலாற்றுச் சிறப்புமிக்கதுமான இந்த ஆலயத்தில் இன்று மார்கழித் திருவாதிரை விழாவின் தேர்த்திருவிழா.

ஈழத்தில் பஞ்சரத பவனி நடைபெறுகின்ற ஒரு சில குறிப்பிட்ட ஆலயங்களுள் இவ்வாலயமும் ஒன்று.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பவற்றை தன்னகத்தே கொண்டு அவ்வூர் மக்களின் நெஞ்சங்களில் எல்லாம் நீக்கமற நிறைந்திருப்பவர் சௌந்தராம்பிகா சமேத சுந்தரேசுவரப் பெருமான்.

ஆனாலும் மக்களின் தீராத காதல் எல்லாம் பூரணை புட்கலாம்பிகா சமேத ஆண்டி கேணி அய்யனார் மீது என்றால் மிகையல்ல.

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற முதுமொழிக்கிணங்க இவ்வூர் மக்கள் எங்கும் வியாபித்து இருக்கிறார்கள்.

உழைப்பதில் ஒரு பகுதியினை இந்தச் சிவன் சந்நிதானத்தில் செலவிட அவர்கள் தயங்குவதேயில்லை.

இரண்டு இராசகோபுரங்கள், இரண்டு மூல மூர்த்திகள், இரண்டு ஆதீனகர்த்தாக்கள், இரண்டு மிகப்பெரிய மகோற்சவங்கள் என ஆலயத்துக்கும் இரண்டுக்கும் மிகப்பெரிய தொடர்பு உள்ளது.

ஆரம்பத்தில் இவ்வாலயத்தினை அம்பலவிமுருகர் என்று சொல்லப்படுகின்ற ஒரு சிவனடியார் உருவாக்கினார்.இன்றும் அவர் வழித்தோன்றல்களாலேயே ஆலயம் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

மணியகாரர் நிர்வகிக்கும் ஒரு சில கோவில்களுள் இதுவும் ஒன்று. ஆ.அம்பலவிமுருகன் மற்றும் மு.சுந்தரலிங்கம் என்போர் தற்போதைய ஆதீனகர்த்தாக்கள்.  இவ்வூர் மக்கள் சொல்வார்கள் “மாப்பாண முதலி வைச்ச வேலும் (நல்லூர்க்கந்தன்) அம்பலவி முருகன் வைச்ச கல்லும் (ஈழத்துச் சிதம்பரம்) நம்பிக்கையில் வீண்போகாது”. இவ்வாறு இவர்கள் இன்றும் பக்தியோடு இந்த ஆலயத்தை வழிபட்டு வருகிறார்கள்.

ஈழத்திலே தலபுராணம் கொண்டுள்ள ஒரு ஆலயமாக இது இருக்கின்றது. நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் மகன், பண்டிதமணி சோ. இளமுருகனார் ஆக்கிய “ஈழத்துச் சிதம்பர புராணம்” இன்றும் சான்றோர்களால் போற்றப்படுகின்ற ஒரு தலபுராணம். இதற்கு உரை எழுதியவர் அவரது பாரியார் பண்டிதைமணி பரமேசுவரியார்.

சுமார் 100 வருடங்களுக்கு முன்னர் இந்த ஆலயத்தில் பிரதிட்டை செய்யப்பட்டதுதான் சிவகாம சுந்தரி சமேத சிவசிதம்பர நடராசப் பெருமான்.

மிடுக்கான இராச தோற்றம். எழிலே உருவான அற்புதமான மூர்த்தம்.

திருவாசகத்திற்கும் தில்லைக்கும் மிக நெருங்கிய தொடர்புள்ளது.

அதே போல இந்த நடராசர் சிலையில் 51 சுடர்கள் உள்ளன.

அவை திருவாசகத்தின் 51 பதிகங்களை நினைவூட்டுகிறது. 

வியாக்கிரபாதர் பதஞ்சலி முனிவர்கள் ஒரே சிலையிலேயே அமையப் பெற்றது மேலும் சிறப்பு.

நடேசர் அபிசேகத்தின் போது உடுக்கை ஏந்திய கையாலும், அக்கினியேந்திய கையாலும் வழிந்து வரும் திரவியங்கள் இவ்விரு முனிவர்களின் சிரசிலும் பொழிவது அற்புதமே.

எத்தனையோ அறிஞர்கள் இந்த நடராசர் விக்கிரகத்தினைப் பார்த்து வியந்தும் பாராட்டியும் எழுதியுள்ளார்கள்.

பரந்த உலகமெங்கும் சென்று பிரசங்கம் செய்த திருமுருக கிருபானந்தவாரியார் இந்த நடராசர் மூர்த்தம் பற்றி சொல்லும் போது, ‘நான் எங்கும் காணாத பேரெழில் இதிலே கண்டேன்’ என்பார்.

அதேபோல தமிழகத்து அறிஞர் மு. பாஸ்கரத் தொண்டைமானும் இந்த சிலை பற்றி விரிவாக விபரித்து ஒரு கட்டுரையே எழுதியுள்ளார்.

இந்த ஆலயத்தின் சிவாச்சாரியார்கள் அன்று அரசாண்ட குளக்கோட்ட மன்னனால் இந்தியாவின் திருவுத்தர கோச மங்கையில் இருந்து வருவிக்கப்பட்டவர்கள்.

அவர்களின் 27வது பரம்பரையைச் சேர்ந்த வி.ஈஸ்வரக்குருக்கள் இப்போதுள்ள பிரதம சிவாச்சாரியார்.

ஈழத்தின் புகழ்பெற்ற அத்தனை தவில், நாதஸ்வர மேதைகளும் இந்த ஆலயத்தில் ஒரு தடவையாவது கச்சேரி செய்திருப்பார்கள்.

அவர்கள் மட்டுமல்லாமல் தமிழகத்தின் மிகப்பிரபல்யமான சகல வித்துவான்களினதும் கச்சேரியும் இங்கே நடந்துள்ளது.அறுபதுகள், எழுபதுகள், எண்பதுகள் என எல்லா ஆண்டுகளிலும் தங்கள் நாதஸ்வர தவில் இசையை இங்கே வழங்கியிருக்கிறார்கள்.

அந்தளவிற்கு இவ்வூர் மக்கள் இந்த இராச வாத்தியத்தை நேசிக்கிறார்கள்.

ஈழம் பெற்றெடுத்த ஒப்பற்ற தவில்மாமேதை வி. தெட்சனாமூர்த்தி இந்த ஆலயத்தில் இருந்தே தனது ஆரம்ப காலப் பயிற்சியை தந்தையிடம் இருந்து பெற்றவர்.

அவர் எங்கு வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டாலும் திரும்பியவுடன் இந்த ஆலயத்தை வந்து தரிசித்துவிட்டே அடுத்த அலுவல்களைக் கவனிப்பார்.

தமிழகத்தின் பிரபல தவில் வித்துவான்கள் வலையப்பட்டி சுப்பிரமணியம், அரித்துவாரமங்கலம் பழனிவேல், கலியமூர்த்தி தற்போது பிரபலமாக இருக்கும் திருப்புன்கூர் முத்துக்குமாரசுவாமி, வாசுதேவன் ஆகியோரும் நாதஸ்வர வித்துவான்களாகிய நாமகிரிப்பேட்டை கணேசன், காருக்குறிச்சி அருணாசலம், ராஜரத்தினம்பிள்ளை, மாம்பழம் சிவா சகோதரர்கள் என பலரும் இந்த ஆலயத்தில் நாதகாணமழை பொழிந்திருக்கிறார்கள்.

இந்த ஆலயத்தின் ஆதீன கர்த்தாக்களில் ஒருவராகிய மு. சுந்தரலிங்கம் அவர்கள் தமக்கேயுரித்தான பாணியில் திருமுறைகளைப் பாடுவார்கள்.

இவரது பாடல்களைக் கேட்க என்றே வரும் அடியவர்கள் இருக்கிறார்கள்.

இன்று பஞ்சரத பவனி. கனகசபையில் இருந்து நடராசர் மல்லாரியுடன் எழுந்து மல்லாரியுடன் ஆடி ஆடி வருகின்ற அந்த அற்புதக்காட்சி காணக் கண் கோடி வேண்டும். “ஆட எடுத்திட்ட பாதமன்றோ நம்மை ஆட்கொள்கிறது” என அடியவர்களும் மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து இறைஞ்ச, அரோகரா ஓசை எங்கும் ஒலிக்க, மல்லாரி முழங்க அந்தக்கணங்கள் எல்லாம் அருகிருந்து பார்க்க வேண்டும். அனுபவிக்க வேண்டும். 

இந்தக் காட்சியைக் காண உலகின் எந்த மூலை முடுக்கில் இருந்தாலும் காரை வாழ் மக்கள் திருவாதிரைக்கு அங்கே கூடி விடுவார்கள். 

மாமணி வீதியாம் மூன்றாம் வீதியில் பஞ்சரதங்களும் ஆடி அசைந்து வரும் காட்சி வருணனைகளுக்கு அப்பாற்பட்டது.

மார்கழி மாதமாதலால் மழைக்கோ வெள்ளத்துக்கோ குறைவில்லை.

அடியவர்களின் அங்கப் பிரதட்டனையும் அடி அழித்தலும் பல சமயங்களில் ஒரு அடி வெள்ளத்தில் கூட இடம்பெற்றிருக்கிறது.

விழாக்காலங்களில் மாணிக்கவாசகர் மடாலய அன்னதான சபையில் மகேசுவர பூசை இடம்பெறும்.
கிடைக்காமல் போகாது என்று எண்ணுமளவிற்கு மிகத்தாராளமாக அன்னதானம் வழங்கப்படும்.

இப்போது அமரர். தியாகராஜா மகேஸ்வரன் (முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்) அவர்கள் உவந்து கட்டித்தந்த இன்னோர் அன்னதான மண்டபத்திலும் அடியவர்களுக்கு உணவளிக்கப்படுகிறது.

மேலும் இந்தவிழாக்காலங்களில் காரைநகர் மணிவாசகர் சபை பாடசாலை மாணவர்களுக்கிடையே சைவ சமய பாடப்பரீட்சை நடாத்தி வெற்றி பெற்றவர்களுக்கு தங்கப்பதக்கங்களும் பரிசில்களும் வழங்குவார்கள்.

அத்தோடு மட்டுமல்லாமல் தமிழ், சைவ அறிஞர்களை அழைத்து சொற்பொழிவுகளையும் ஒழுங்கு செய்வார்கள். தமிழக அறிஞர்கள் பலரும் இங்கே மேடையேறியுள்ளார்கள் என்பதும் ஒரு சிறப்பே.

இந்த ஆலயத்தை சூழ உள்ள பகுதி திண்ணபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.

அது மிகவும் களிமன் சார்ந்த பகுதி. இதனால் இங்குள்ள முதியவர்கள் திண்ணைக் களியான் என்று சிவனை மிகவும் அன்பாக அழைப்பார்கள்.  பல புலவர்கள் ஆலயத்தின் மீது பல பக்திப்பாமாலைகள் பாடியுள்ளார்கள்.

தேர்த்திருவிழாவின் நள்ளிரவின் பின்னதாக ஆருத்திரா அபிசேகம் நடைபெறும்.மிக மிக அரிதான ஒரு காட்சி. சிதம்பரம் சென்று ஆருத்திரா தரிசனம் காண முடியாதவர்கள் எல்லாம் அந்த குறித்த நாளிகைக்காக இங்கே கூடுவார்கள்.

பிரமாண்ட வசந்தமண்டபத்தில் நடைபெறும் இந்த அபிசேகத்தின் போது ஈழ, தமிழக நாதஸ்வர தவில் வித்துவான்களின் கச்சேரி நடைபெறும்.

சுமார் 5 மணித்தியாலமாக நடைபெறும் இந்தக் கச்சேரியைக் காணவென்றே பல இசைரசிகர்கள் குழுமியிருப்பார்கள்.

கலைஞர்களும் தமது வித்துவத்திறமையைக் காட்டும் ஒரு களமாக இதைப் பயன்படுத்துவார்கள்.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆடலரசனின் நடனமும், நாதகானமழையும் இன்றைய சிறப்பாக அங்கே அமையும்.

ஆம்... இந்த ஈழத்துச் சிதம்பரன் வெறும் காரை மக்களின் கடவுளல்ல.
கடல் அடித்து கரையொதுங்க முடியாத அழவிற்க்கு பூமிப் பந்தில் பரந்து வாழும் உலகத்தமிழர்களால் போற்றி வணங்கப்படும் ஆதி சித்தன், அம்பலவாணன் அப்பனும் அம்மையுமானவன்.
தமிழும் சைவமும் ஓங்குக சரித்திரம் அனுதினம் உலகெல்லாம் ஒலிக்கட்டும்.
அன்பே சிவம். அவனே மயம்
ஓம் நமசிவாய..