காதலில் தடுக்க வேண்டியது? காதல் விதிகள். பாகம் - 9

#Love #Article #Tamil People
Kesariat month's ago

காதலில் எப்போது செக்ஸ் தலைதூக்கும்? அதனை எப்படி வெற்றிகரமாகச் சமாளிப்பது என்பதைப் பார்க்கலாம். சந்திப்புகள்  அடிக்கடி நடக்கத் தொடங்கிய பின்னர் இருவரும் அதிக உரிமை எடுத்துக்கொள்வார்கள்.  சகஜமாக தொடுவதும், விளையாடுவதும், கோபம் வந்தால் கிள்ளுவதும், அடிப்பதும் என ஆரம்பிப்பார்கள்.  இதிலும் கொஞ்சம் இன்பம் இருப்பது தெரிந்ததும் சிறிது சிறிதாக முன்னேறத் தொடங்குவார்கள்.

விலை உயர்ந்த பரிசு கொடுத்துவிட்டு, தொடுதலில் இன்னும் நெருக்கம் காட்டத் தொடங்குவார்கள்.  லேசாக முத்தமிடத் தொடங்கியவர், பிறகு முத்தமிடுவதை சர்வ சாதாரணமாக்கிக் கொள்வார்கள்.  லேட்டாக வந்தால் அதற்குத் தண்டனையாக முத்தம், போன் செய்து தகவல் சொல்ல மறந்தால் அதற்கொரு முத்தம், புதிதாக ஒரு ஆடை உடுத்தி வந்தால் அதற்கும் ஒன்று என இப்படிப் பரிமாறப்படும்.  முத்தங்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகும்.  இந்த விஷயம் ஓரளவு சகஜமான பின்னர் அடுத்தகட்டமாக முத்தம் கொடுக்கும் இடங்கள் மாறத் தொடங்கும்.

ஆரம்பத்தில் கையில் முத்தம் கொடுத்தாலே வானில் பறப்பதுபோலத் தெரியும்.  காதலர்களுக்கு அடிக்கடி கையில் முத்தம் கொடுப்பது ஒரு அனிச்சை செயலாக, அதிக இன்பம் தராத விஷயமாக மாறிவிடும்.  அதனால் கொஞ்சம் கொஞ்சமாக கன்னம், நெற்றி, கண்கள் என நெருங்கி நெருங்கி கடைசியில் உதட்டைத் தொடுவார்கள்.

உதட்டைத் தொட்டவுடன் அவர்களால் கட்டுப்படுத்த முடியாத நிலைக்குப் போய்விடுவார்கள்.  ஏனென்றால் உதடுகளில் தான் மனித உடம்புகளின் இன்ப நரம்புகளின் முடிச்சு இருக்கிறது.  மேலும், இதுவரை கொடுக்கப்பட்ட முத்தங்கள் எல்லாம் ஒத்தி எடுக்கப்பட்டவை மட்டுமே.  அதனால் ஒரு நொடிக்கு மேல் வேலையில்லை.  ஆனால் உதட்டில் கொடுக்கப்படும் முத்தம் என்பது அப்படி அல்ல.  கை, கால் என அத்தனை அவயங்களுக்கும் வேலை கொடுத்து நேரத்தை நீட்டித்து உயிர் வரை இனிக்கக்கூடிய அற்புதமாகும்.

அதுவரை தொடுவதற்கு பயந்த உடல் அவயவங்களை இந்த முத்தத்தின் போது மிகச் சாதாரணமாக தொடவும்.  இஷ்டம்போல் விளையாடவும் இயலும்.  அதனால் இது ஓர் ஆபத்தான கட்டம்.  இந்தக்  கட்டத்தை தொட்டுவிட்டால், உடலில் அதுவரை தூங்கிக் கொண்டிருக்கும் அத்தனை அவயங்களும் விழித்துக்கொள்ளும்.  வயிற்றுக்குப் பசி எடுப்பதுபோல் உடலுக்கும் பசி எடுக்கத் தொடங்கிவிடும்.  இது தவறான ஒரு பாதையில் போய் முடிந்துவிடும்.

அதனால் காதலில் அடிபட்டவர்கள் ஆரம்பத்திலேயே, முத்தம் என்ற நிலைக்குப் போவதேயில்லை என்ற கொள்கையில் உறுதியாக இருப்பது நல்லது.  முத்தம் கேட்பது, கொடுப்பது என எதுவும் வேண்டாம் என ஆரம்பத்திலேயே ஒப்பந்தம் செய்துகொள்ளலாம்.

மனத்தைவிட உடல் பல சமயங்களில் கட்டுப்பாடுகளை இழந்து விடலாம்.  அதனால் இவற்றைச் சமாளிப்பதற்கு பெரும்பாடு படவேண்டி இருக்கும்.  இதையெல்லாம் தடுக்க மிக எளிதான வழி.  இருவரும் தனிமையில் சந்திக்காமல் இருப்பதுதான்.  கூட்டம் மிகுந்த ரெஸ்டாரெண்ட், ஜன நடமாட்டமுள்ள பீச், சினிமா தியேட்டர்கள், ஆள்கள் அதிகம் நடமாடும் நேரங்களில் பார்க் சந்திப்பு என திட்டமிட்டே சந்திப்புகளை நடத்த வேண்டும்.  இப்படி இருக்கும்போது காதல் பற்றிய மரியாதையும், ஒரு எதிர்பார்ப்பும் கூடும்.  மதிப்பாக இருக்கும்.

காதலர்கள் கொஞ்சம் அதிகமாக நெருங்கியதும், முக்கியமாக ஆண்கள் தைரியமாக செக்ஸ் பேச்சுக்களை ஆரம்பிபார்கள்.  செக்ஸ் சம்பந்தப்பட்ட ஜோக்சில் தொடங்கி, கொஞ்சம் கொஞ்சமாக அங்க அவயங்களை வர்ணிக்கத் தொடங்கி, செக்ஸ் வைத்துக்கொள்ள அடிபோடுவார்கள்.

ஆரம்பத்தில் தயங்கித் தயங்கி கேட்பார்கள்.  பெண் எதிர்ப்பு தெரிவிக்கும்போது, பயந்ததுபோல் நடிப்பார்கள்.  மிகக் கொஞ்ச நாள் அதைப்பற்றி பேசாமல் இருந்துவிட்டு, பின்னர் மீனும் அதுபற்றிய பேச்சில் இறங்குவார்கள்.