மனதை ஒருமுகப்படுத்தும் விருக்‌ஷாசனம்

#meditation
Prasuat year ago

உடலை சமநிலைப்படுத்தி, மனதை ஒருமுகப்படுத்துகிற வகையில் நவுகாசனம், விருட்சாசனம், தனுராசனம், தாடாசனம், சிரசாசனம், விபரீதகரணி முதலியவை மிக முக்கியமானவை. அதேபோல, பிராணாயாமத்தில், நாடி சுத்தி பிராணாயாமம், பிரம்மரி பிராணாயாமம், உஜ்ஜயி பிராணாயாமம் மிகவும் நல்லது. இதில் மிகவும் விசேஷமான விருக்‌ஷாசனம் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.

விருட்சம் என்றால் மரம். மரம்போல நிற்கும் நிலை என்பதால் விருக்‌ஷாசனம் என்ற பெயர். முதலில் கால்களை நேராக வைத்து, நன்கு நிமிர்ந்த நிலையில் நிற்க வேண்டும். பின்னர் இடது காலை மடக்கி வலது தொடையில் பதிய வைக்க வேண்டும். மடித்து வைக்கப்பட்ட கால் 90 டிகிரி அளவில் பக்கவாட்டில் விரிந்திருக்க வேண்டும். பின்னர், மெதுவாக கைகளை இணைத்து நமஸ்காரம் செய்வதுபோல, மார்புக்கு மத்தியில் வைக்க வேண்டும். இதற்கு ‘நமஸ்கார முத்ரா’ என்று பெயர். இது முதல் நிலை.

பிறகு, கைகளை நமஸ்கார முத்ரா நிலையிலேயே உயர்த்தி, தலைக்கு மத்தியில், அதாவது உச்சந்தலையில் வைக்க வேண்டும். இதற்கு ‘கயிலாய முத்ரா’ என்று பெயர். இது 2-வது நிலை.

பிறகு, காதுகளை ஒட்டினாற்போல கைகளை நேராக மேலே உயர்த்தி, நமஸ்காரம் செய்வதுபோல வைக்க வேண்டும். இது ‘அஞ்சலி முத்ரா’ எனப்படும். இது 3-வது நிலை. ஒவ்வொரு நிலையிலும் 3 முறை மூச்சை இழுத்து விட வேண்டும். பின்னர் கால்களை கீழே இறக்கிவிட வேண்டும், அடுத்து, வலது காலை மடக்கி இதேபோல செய்ய வேண்டும். இப்பயிற்சியின்போது, சாதாரணமாக மூச்சுவிட வேண்டும்.

தொடர்ந்து இந்த ஆசனம் செய்தால் கால்கள் நன்கு வலுப்பெறும். புஜங்கள் விரிவடையும். முக்கியமாக, மனதை ஒருநிலைப்படுத்த முடியும். விருட்சாசனம் உடலின் சமநிலையைக் கூட்டி, மன தடுமாற்றத்தைப் போக்கும். கவனக் குவிப்புத் திறன் வளரும் என்பதால் படிக்கும் மாணவர்களுக்கு இது மிகவும் நல்லது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். துருதுருவென்று ஒரு இடத்தில் நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் குழந்தைகளின் மனதை ஒருநிலைப்படுத்த இந்த ஆசனம் உதவும்.

மேலும் யோகாசன தகவல்களை பார்வையிட இங்கே அழுத்தவும்