துருக்கி நிலநடுக்கம் - பல மணிநேரம் சிக்கி தனது சகோதரனை காப்பாற்றிய சிறுமி (காணொளி உள்ளே)

#Earthquake #Turkey #துருக்கி #நிலநடுக்கம் #சிறுவர் #Death #world news #Tamilnews #Lanka4
Prasuat month ago

துருக்கி- சிரியா எல்லையில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் எல்லை நகரங்களில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கம் பல்லாயிரக்கணக்கானோரின் உயிரை காவு வாங்கி உள்ளது. 

இன்றைய நிலவரப்படி உயிரிழப்பு 11 ஆயிரத்தை தாண்டியது. இடிபாடுகளை தோண்டத்தோண்ட சடலங்கள் தென்பட்ட வண்ணம் உள்ளன. எனவே, பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. 

மீட்பு பணிகளின்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இந்த நிலையில், வடக்கு சிரியாவில் நிலநடுக்க இடிபாடுகளுக்கு இடையே சிக்கிக்கொண்ட சிறுமி, 17 மணிநேரம் வரை தனது சகோதரனை காப்பாற்ற போராடிய வீடியோ வைரலாகி வருகிறது. 

அவர்கள் இருவரும் வீட்டில் இருக்கும்போது, நிலநடுக்கத்தில் சிக்கியுள்ளனர். இதில், மரியம் என்ற அந்த 7 வயது சிறுமி, இடிபாடுகளுக்கு இடையே சிக்கி படுத்த நிலையில் இருக்கிறார். 

அவருக்கு அருகே சிறுமியின் சகோதரன் படுத்து கிடக்கிறான். இருவரும் நகர முடியாமல் கிடக்கின்றனர். எனினும், சகோதரன் மீது தூசு உள்ளிட்ட எதுவும் விழுந்து விடாமல் இருக்க தலையில் கையை கொண்டு சிறுமி போர்த்தியபடி காணப்படுகிறார். 

சிமெண்ட் சிலாப்புகளுக்கு கீழே சிக்கியிருந்த இரண்டு பேரையும் மீட்பு குழுவினர் மீட்டு சிகிச்சையில் சேர்த்து உள்ளனர். 

இதேபோல் சிரியாவின் அப்ரின் நகரில் நிலநடுக்கத்தால் நொறுங்கிய மருத்துவமனைக்குள் தாய் இறந்த நிலையில், தொப்புள் கொடி அறுக்கப்படாத நிலையில் ஒரு பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. 

இதுதொடர்பாக மீட்புக்குழுவினர் பகிர்ந்துள்ள வீடியோ, பார்த்தவர்களை பதற வைத்துள்ளது.