நாசா விண்வெளி மையத்தால் அமீரக விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி....

#world news
Kesariat day's ago

அமீரகத்தின் முதல்கட்ட விண்வெளி வீரர்களான ஹசா அல் மன்சூரி மற்றும் சுல்தான் அல் நியாதி ஆகியோருக்கு நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்தில் சிறப்பு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது சர்வதேச விண்வெளி மையத்தின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.இதற்காக கனடா நாட்டு தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஆய்வகத்தில் பயிற்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொதுவாக விண்வெளியில் மிதந்து கொண்டு இருக்கும் சர்வதேச விண்வெளி மையத்திற்கு (ஐ.எஸ்.எஸ்) தேவையான பொருட்களை அவ்வப்போது விண்கலன்கள் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

மெய்நிகர் பயிற்சி

சமீப காலமாக இதற்கு ‘சைக்னஸ்’ என்ற விண்கலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பூமியில் இருந்து ராக்கெட் மூலம் செலுத்தப்படும் சைக்னஸ் விண்கலம் ஆளில்லாமல் தானாக சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்து விடுகிறது. இதில் அந்த விண்கலனை கட்டுப்படுத்தி சரியாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் இணைப்பதற்கு அங்கு தங்கியுள்ள விண்வெளி வீரர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்பட்டு இருக்க வேண்டும். அவ்வாறு பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே சர்வதேச விண்வெளி மையத்தில் கட்டுப்பாடுகளை இயக்க தகுதி அளிக்கப்படும்.இதற்காக தற்போது அமீரக விண்வெளி வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதில் சர்வதேச விண்வெளி மையத்தின் கட்டுப்பாட்டு அறையில் உள்ளது போன்ற அமைப்பில் பூமியில் இருந்து வரும் ‘சைக்னஸ்’ விண்கலத்தை அந்த மையத்துடன் சரியாக இணைக்க மெய்நிகர் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

நாசா விண்வெளி திட்டம்

அதைத்தொடர்ந்து கனடா நாட்டு தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்ட ரோபோ கரங்களை இயக்கும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கூடுதலாக ரஷிய மொழியில் கட்டுப்பாடுகளை இயக்கவும் கற்றுத்தரப்படுகிறது.இவர்கள் இருவருடன் அமீரகத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட முகம்மது அல் முல்லா மற்றும் அரபு நாடுகளின் முதல் விண்வெளி வீராங்கனை நோரா அல் மத்ரூசி ஆகியோருக்கும் விண்வெளி பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சிகள் நிறைவடைந்து அவர்களுக்கான தேர்வில் வெற்றி பெற்றதும் நாசா விண்வெளி திட்டங்களில் ஈடுபடுத்தப்படுவார்கள்.