இன்றைய வேத வசனம் 25.01.2023: பொன்னைச் சம்பாதிப்பதிலும் ஞானத்தைச் சம்பாதிப்பது எவ்வளவு உத்தமம்

#Bible
Pratheesat day's ago

ஒரு நாள் சாலை ஓரத்தில் இரு சிறுவர்கள் சண்டை இட்டுக்கொண்டிருந்தனர் அப்பொழுது அந்த வழியாக சென்ற ஒருவர் இருவரையும் அழைத்து ஏன் இப்படி அடித்துக்கொண்டிருக்கிறீர்கள், உங்கள் பள்ளியில் இதை தான் சொல்லி தந்தார்களா என்று கேட்டார்.

அதற்கு அந்த சிறுவர்கள் நாங்கள் பள்ளி சென்றதில்லை, எங்களுக்கு படிப்பதற்கு பணம் இல்லை, எங்கள் குடும்பத்தின் நிலையை மாற்ற நாங்கள் கூலி வேலை செய்கிறோம், சில நேரங்களில் டீ கடையில் வேலை செய்வோம் என்று கூறினார்கள்.

அவர்களின் நிலையை உணர்ந்த அந்த மனிதர் உங்களுக்கு படிக்க விருப்பம் இருந்தால், தான் உதவுவதாக கூறினார்.

சிறுவர்கள் இருவரும் இல்லை நாங்கள் வேலைக்கு செல்வதே நன்றாக உள்ளது எங்களுக்கு படிக்க விருப்பம் இல்லை என்று கூறினார்கள்.

அந்த மனிதரோ, சிறுது நேரம் படிப்பின் சிறப்பையும் அதனால் ஏற்படும் நன்மையையும் எடுத்துரைத்தார்.
சிறிது நேர விளக்கத்திற்கு பின்னர் ஒரு சிறுவன் தான் படிக்க ஆர்வமாய் உள்ளதாக கூறினான்.

அதற்கு மற்ற சிறுவனோ, அந்த சிறுவனிடம் வேண்டாம், படிக்க சென்றால் நம் கையில் காசு இருக்காது... சாப்பாட்டுக்கே வழி இருக்காது என்று ஒரு விதமான பயத்தை ஏற்படுத்தினான்.

ஆனால் அந்த சிறுவன் தான் படிக்க தான் போகிறேன் என்று உறுதியாக கூற, அந்த மனிதர் ஒரு சிறுவனை மட்டும் அழைத்து சென்று படிக்க வைத்தார்.

நாட்கள் நகர்ந்தன, ஒரு சிறுவன் தினமும் பள்ளி சென்று கல்வி கற்க தொடங்கினான். மற்றொரு சிறுவனோ கூலி வேலை மற்றும் டீ கடையில் வேலையை தொடர்ந்தான்.

ஒரு நாள் மாலை நேரம் பள்ளி சென்ற சிறுவன் பள்ளி விட்டு வரும் வழியில் தன் நண்பனை கண்டான். அந்த சிறுவனோ மிகவும் சிரமப்பட்டு ஒரு கதவை தள்ளி திறக்க முயற்சித்து கொண்டிருந்தான்.

இவன் ஓடிச்சென்று அவனுக்கு உதவி செய்தான், அந்த கதவில் "இழு" என்று எழுதி இருந்தது. ஆனால் வேலை செய்து கொண்டிருந்த சிறுவனோ அதற்கு அர்த்தம் தெரியாமல் அந்த கதவை தள்ளி திறக்க முயற்சி செய்து கொண்டிருந்தான்.

பள்ளி சென்ற சிறுவன் அவனுக்கு விளக்கம் கொடுத்து அந்த அந்த கதவை திறக்க உதவி செய்தான்.
அப்பொழுது தான் புரிந்தது, கல்வி கண்ணை மட்டும் அல்ல, கதவை திறக்க வேண்டுமென்றாலும் கல்வி பயன்படும் என்பதாக.

பரிசுத்த வேதாகமம் சொல்கிறது:-
பொன்னைச் சம்பாதிப்பதிலும் ஞானத்தைச் சம்பாதிப்பது எவ்வளவு உத்தமம்! வெள்ளியைச் சம்பாதிப்பதிலும் புத்தியைச் சம்பாதிப்பது எவ்வளவு மேன்மை! (#நீதிமொழிகள் 16:16). என்று.
இன்று கூட, கல்வி கற்க போதிய பண வசதியில்லாமல் தவிக்கும் எத்தனையோ குழந்தைகள் நீங்கள் வசிக்கும் பகுதியில் இருக்கலாம். அந்த குழந்தைகளின் கல்வி கண் திறக்க நீங்கள் முன்வாருங்கள்.
இயேசு சொல்கிறார்:- அப்பொழுது அவர் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று. (மத்தேயு 25:45)
பரிசுத்த ஆவியானவர் தாமே உங்களுக்கு உதவி செய்வாராக. ஆமென்!! அல்லேலூயா!!!