இன்றைய வேத வசனம் 11.01.2023: சிங்கங்கள் என்னைச் சேதப்படுத்தாதபடிக்குத் தேவன் தம்முடைய தூதனை அனுப்பி, அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார்.

#Bible
Pratheesat month's ago

சிங்கங்கள் என்னைச் சேதப்படுத்தாதபடிக்குத் தேவன் தம்முடைய தூதனை அனுப்பி, அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார். தானியேல் 6:22

தாஹெரும் அவருடைய மனைவி டோன்யாவும் இயேசுவை ஏற்றுக்கொண்டதினிமித்தம் தங்கள் சொந்த தேசத்தில் பாடுகளை அனுபவிக்கவேண்டியதை அறிந்தே செயல்பட்டனர்.

அதன் விளைவாய் தாஹெர் கண்களும் கைகளும் கட்டப்பட்டவராய் சிறையிலடைக்கப்பட்டு விசுவாச துரோகம் இழைத்தவர்களாய் குற்றஞ்சாட்டப்பட்டனர். அவர்கள் சித்திரவதை அனுபவிக்கப்போகும் முன்பு, அவரும் அவருடைய மனைவி டோன்யாவும் இயேசுவை மறுதலிக்கப் போவதில்லை என்ற தீர்மானத்தை எடுத்தனர். 

அவரை கொலைசெய்ய கொண்டுபோகும் இடத்தில் நடந்த சம்பவம் அவரை ஆச்சரியப்படுத்தியது. நீதிபதி அவரைப்பார்த்து, “எனக்கு ஏன் என்று தெரியவில்லை, ஆனால் மீனின் வாயிலிருந்தும் சிங்கத்தின் வாயிலிருந்தும் உன்னை விடுவிக்க விரும்புகிறேன்” என்று சொன்னார். நீதிபதி உதாரணமாய் பயன்படுத்திய வேதத்தின் இந்த இரண்டு சம்பவங்களை வைத்து (யோனா 2, தானியேல் 6) தேவன் தம்மை விடுவிக்க விரும்புகிறார் என்பதை தாஹெர் புரிந்துகொண்டார். தாஹெர் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவனுடைய குடும்பம் வேறு தேசத்திற்கு நாடுகடத்தப்பட்டனர். 

தாஹெரின் இந்த ஆச்சரியமான மீட்பு தானியேலின் சம்பவத்தை நினைவுபடுத்துகிறது. திறமையான நிர்வாகியாய் அவன் படிப்படியாய் முன்னேறுவதை அவனோடிருந்த மற்ற தலைவர்கள் விரும்பவில்லை (தானியேல் 6:3-5). ராஜாவைத் தவிர யாரையும் வணங்கக்கூடாது என்னும் சட்டத்தை பிறப்பிக்கச் செய்து, அவனை குற்றப்படுத்த எண்ணினர்.

தானியேல் இதை சற்றும் பொருட்படுத்தவில்லை. தரியு ராஜாவுக்கு அவனை சிங்கக்கெபியில் போடும்படிக்கு உத்தரவு பிறப்பிப்பதைத் தவிர்த்து வேறு வழியில்லை (வச. 16). தாஹெரை ஆச்சரியவிதமாய் விடுவித்ததுபோல, தானியேலை தேவன் மரணத்திலிருந்து காப்பாற்றுகிறார் (வச. 27). 
இயேசுவை பின்பற்றுவதினால் இன்று அநேக தேவ பிள்ளைகள் உபத்திரவத்தை சந்திக்கின்றனர். சிலர் கொலையும் செய்யப்படுகின்றனர்.

நாம் உபத்திரவத்தை சந்திக்கும்போது, நம்முடைய அறிவுக்கு அப்பாற்பட்ட வழியை கர்த்தர் வைத்திருக்கிறார் என்று நம்முடைய விசுவாசத்தை பெலப்படுத்திக்கொள்ளலாம். நீங்கள் எந்த யுத்தத்தை சந்தித்தாலும் அவர் உங்களோடிருக்கிறார் என்பதை அறியுங்கள்.