இன்றைய வேத வசனம் 10.01.2023: பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்

#Bible
Pratheesat month's ago

பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன். ஏசாயா 43:1

என்னுடைய பிரசங்கத்தின் ஒரு பகுதியாக, மேடையில் ஓவியம் வரைந்துகொண்டிருந்த பெண் ஓவியரிடம் சென்று அவள் வரைந்துகொண்டிருந்த ஓவியத்தின் நடுவில் ஒரு கறுப்பு கோடு ஒன்றைப் போட்டேன். திருச்சபை விசுவாசிகள் அதிர்ச்சியடைந்தனர்.

ஓவியரின் அழகான அந்த படைப்பை நான் சிதைப்பதை அவள் வெறித்து பார்த்துக்கொண்டிருந்தாள். பின்னர், ஒரு புதிய தூரிகையைத் தேர்ந்தெடுத்து, பாழடைந்த அந்த ஓவியத்தை வேறொரு அழகிய கலைப் படைப்பாக ஆர்வத்துடன் மாற்றினாள்.

அவளுடைய அந்த படைப்பாற்றல், நம்முடைய வாழ்க்கை பாழாக்கப்படும்போது தேவன் செய்யும் கிரியையை எனக்கு நினைவுபடுத்தியது.

ஏசாயா தீர்க்கதரிசி, இஸ்ரவேல் ஜனங்களின் ஆவிக்குரிய குருடாக்கப்பட்ட நிலைமையையும் செவிடாக்கப்பட்ட நிலைமையையும் கடிந்துகொள்கிறார் (ஏசாயா 42:18-19). அதன் பின்பு, தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்தை அறிவிக்கிறார்: “பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்” (43:1). அவர் நமக்கும் அதை செய்ய வல்லவர்.

நாம் பாவம் செய்த பின்பும், பாவத்தை அறிக்கையிட்டு அவரிடம் திரும்பும்போது அவர் நம்மை மன்னித்து நம்மை மீட்டுக்கொள்ள போதுமானவராயிருக்கிறார் (வச. 5-7; பார்க்க 1 யோவான் 1:9). அலங்கோலத்தை நம்மால் அழகாக்க முடியாது.

ஆனால் இயேசுவால் அது கூடும். இயேசு நம்மை அவருடைய இரத்தத்தினால் மீட்டுக்கொண்டார் என்பதே சுவிசேஷத்தின் நற்செய்தி. முடிவிலே கிறிஸ்து நம் கண்ணீரைத் துடைத்து, நம்முடைய கடந்த காலத்திலிருந்து நம்மை மீட்டு, அனைத்தையும் புதிதாக்குவார் என்று வெளிப்படுத்தின விசேஷம் உறுதியளிக்கிறது (வெளிப்படுத்தல் 21:4-5).

வாழ்க்கையைக் குறித்த நம்முடைய அறிவு குறைவானது. ஆனால் நம்மை பேர்ச்சொல்லி அழைக்கிற தேவன் (ஏசாயா 43:1), நம்முடைய வாழ்க்கையை நாம் எதிர்பார்த்ததை விட நேர்த்தியாய் மாற்றுகிறவர்.

இயேசுவின் மீதான விசுவாசத்தினால் நீங்கள் மீட்கப்பட்டவர்களாயிருந்தால், அந்த ஓவியத்தைப் போன்று உங்களுடைய ஜீவியமும் நேர்த்தியான முடிவை பெற்றிருக்கும்.