இன்று உலக மனிதநேய தினம் 19-8-2021

Kesariat year ago

இருகரம் கூப்பி வணங்குவதைவிட ஒரு கரம் நீட்டி உதவி செய்வது உன்னதமானது என்பார்கள். இந்த உயர்ந்த நோக்கத்தை வலியுறுத்தத் தோன்றியது தான் உலக மனிதநேய தினம். உலகளாவிய ரீதியில் யுத்தம், இயற்கைப்பேரிடர், நோய், போதிய சத்துணவின்மை போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மக்களை நினைவு கூரும் வகையிலும், இவர்களைப் பாதுகாக்க பாடுபட்ட சேவையாளர்களை நினைவு கூரும் வகையிலும் மனிதநேய நாள் அனுஷ்டிக்கப்படுகிறது. 2008-ம் ஆண்டு டிசம்பர் 11-ந்தேதி ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் தீர்மானத்தின்படி இந்த நாள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

முதலாவது உலக மனிதநேய தினம் 2009-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 19-ந்தேதி நடத்தப்பட்டது. இந்த மனித நேயச் சிந்தனை தமிழனுக்குப் புதிதல்ல. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” எல்லா ஊர்களும் நமதே! எல்லோரும் நமது உறவினர்களே! என்று சங்ககாலப் புலவன் கணியன் பூங்குன்றனின் கூற்று உயர்ந்து ஓங்கி ஒலிக்கிறது.

மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் போர் நடந்தது. அப்போது தமிழ் மன்னன் ஒருவன் இருபடையினருக்கும் சோறு கொடுக்கும் புண்ணியத்தைச் செய்தானாம். அவன் பெயர் சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன். இந்தத் தகவலை சங்ககாலப் புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர் பாடுகிறார். கைவீசி நடந்தால் காற்றுக்கும் வலிக்குமென்று கைகட்டியே நடந்தவர் வள்ளலார் என்பார்கள். அவர் உருகுவதைப் பாருங்கள்

“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்

வீடுதோறும் இரந்தும் பசியறாது அயர்ந்த

வெற்றைக் கண்டுள்ளம் பதைத்தேன்.

மனிதர்களின் பசியைப் போக்கும் எண்ணத்தோடு வடலூரில் அவர் ஏற்படுத்தியதுதான் தர்மசாலை. சேவை செய்வதற்கென்றே வாழ்நாளை அர்ப்பணித்தவர் அன்னைதெரசா.

பேரறிஞர் அண்ணா அமெரிக்க பயணத்தை முடித்தபிறகு ரோமில் போப் ஆண்டவரைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போப் ஆண்டவரைச் சந்திக்க வருகிறவர்களுக்கு பரிசு ஒன்று கொடுக்கப்படுவதுண்டாம். என்ன பரிசு வேண்டும் என்று உதவியாளர் கேட்டபோது, ஒரு வித்தியாசமான பரிசை அண்ணா கேட்டார். இந்திய நாடு ஆங்கிலேயரிடமிருந்து விடுதலைபெற்றபோது, இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கோவா விடுதலை பெறவில்லை.

காரணம் அந்தப்பகுதி போர்ச்சுக்கீசியர் வசமிருந்தது. தாமதமாகத்தான் விடுதலை கிடைத்தது. ஆனால் கோவாவின் விடுதலைக்குப் பாடுபட்ட ராணடே என்பவர் கைது செய்யப்பட்டு போர்ச்சுகல் நாட்டின் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். மத அடிப்படையில் அந்த நாடு போப் ஆண்டவரின் ஆளுகைக்கு உட்பட்டது. அந்த விடுதலைவீரர் ராணடேயின் விடுதலையைத்தான் பரிசாகக் கேட்டார் அண்ணா. இந்தத் தகவல் போப் ஆண்டவருக்குட்பட்டது. விசாரிப்பு நடந்தது.

“அவரை உங்களுக்குத் தெரியுமா, “தெரியாது” “பிறகு ஏன் அவருக்கு விடுதலை கேட்கிறீர்கள்?” “ஒரு விடுதலை இயக்கத்துக்குத் தலைமை தாங்கியவரை சிறையில் வைத்திருப்பதைவிட மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யலாமே” “அது என்னால் இயலும். ஆனால் உடனடியாக முடியாது உங்களின் மனித நேயத்துக்கு மதிப்பளித்து நிச்சயம் விடுதலைக்கு ஏற்பாடு செய்வேன்” போப் ஆண்டவர் உறுதியளித்தபிறகு தான் அண்ணா நிம்மதியடைந்தார். சில மாதங்களுக்குப் பிறகு ராணடே விடுதலை செய்யப்பட்டார். தனது விடுதலைக்கு அண்ணாவின் முயற்சிதான் காரணம் என்று அறிந்ததும் உருகிப்போனாராம்.

டெல்லி திரும்பியதும் அண்ணாவைச் சந்திக்க ஆவல் கொண்டு விசாரித்திருக்கிறார். அப்போது நாடாளுமன்ற உறுப்பினராயிருந்த நாஞ்சில் கி.மனோகரிடம் அனுப்பியிருக்கிறார்கள். அவரிடம் விசாரித்த போது, அண்ணா காலமாகிவிட்டார் என்று நாஞ்சில் மனோகரன் அழுகையுடன் சொல்ல, ராணடேயும் அழுதாராம். அவரது கல்லறைக்காவது அழைத்துச் செல்லும்படி வேண்டிக்கொள்ள, மனோகரனும் அழைத்து வந்தாராம். சென்னை கடற்கரையில் உள்ள அண்ணா கல்லறையில், முகம் தெரியாத எனக்காகப் பாடுபட்ட உங்களின் முகத்தைக்கூடப் பார்க்க முடியவில்லையே என்று முட்டி முட்டி அழுதாராம். மனித நேயத்தின் மகத்துவத்தைப் பாருங்கள்.

ஆத்திக, நாத்திக கொள்கைகளால் முரண்பட்டிருந்தாலும் பெரியாரும், தமிழறிஞர் திரு.வி.க.வும் நெருங்கிய நண்பர்களாயிருந்தனர். ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஈரோடு சென்ற திரு.வி.க., பெரியார் இல்லத்திலேயே தங்கினார். காலையில் குளித்துவிட்டு திரு.வி.க. அறையிலிருந்து வெளியே வந்தார். ஒரு தாம்பாளத்தில் தேங்காய், பழம், பூ, சூடம், விபூதி போன்ற பூஜை பொருட்களோடு பெரியார் நின்றிருந்தார். உங்கள் நெறிமுறைக்கு நான் மரியாதை காட்ட வேண்டுமே என்று பெரியார் சொன்னபோது, திரு.வி.க. நெகிழ்ந்து விட்டார். நீங்கள் மற்றவர்களை நேசியுங்கள். மற்றவர்கள் உங்களை நேசிப்பார்கள்.