சீன அலைபேசிகளை தூக்கி எறியுங்கள்: லிதுவேனியா நாடு எச்சரிக்கை!

Keerthiat day's ago

வடக்கு ஐரோப்பிய நாடான லிதுவேனியாவின் பாதுகாப்பு அமைச்சகம், சீன நாட்டின் ஜியோமி மற்றும் ஹூவாவே 5ஜி அலைபேசிகளில் தகவல் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதால் புதிய சீன அலைபேசிகளை வாங்க வேண்டாம், பழைய சீன அலைபேசிகளையும் எவ்வளவு விரைவாக தூக்கி எறியமுடியுமோ எறிந்துவிடுங்கள் என கூறியுள்ளது.

இது தொடர்பாக லிதுவேனியாவின் தேசிய சைபர் பாதுகாப்பு மையம் சீன 5ஜி அலைபேசிகளை ஆராய்ந்து தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜியோமியின் எம்.ஐ., 10டி 5ஜி அலைபேசியில் திபெத் விடுதலை, வாழ்க தைவான் சுதந்திரம், ஜனநாயக இயக்கம் போன்ற வார்த்தைகளை கண்டறிந்து தணிக்கை செய்யும் மென்பொருள் இருப்பது கண்டறியப்பட்டது. ஜியோமியில் நிறுவப்பட்டுள்ள பிரவுசர் செயலி உட்பட பல செயலிகள் இது போன்று 449 வார்த்தைகளை கண்டறிந்து தணிக்கை செய்யக்கூடியதாக உள்ளது. ஐரோப்பிய மாடல்களில் அந்த தணிக்கை அணைக்கப்பட்டுள்ளது. ஆனால் எப்போது வேண்டுமானாலும் எங்கிருந்தும் செயல்படுத்தக் கூடியதாக உள்ளது.

ஜியோமி அலைபேசி என்க்ரிப்ட் செய்யப்பட்ட அலைபேசியின் பயன்பாட்டு தகவலை சிங்கப்பூருக்கு மாற்றுகிறது. இது லிதுவேனியா நாட்டிற்கு மட்டுமல்ல ஜியோமி சாதனத்தை பயன்படுத்தும் அனைத்து நாடுகளும் கவனிக்க வேண்டியது. அதே போல் சீன நிறுவனமான ஹூவாவேயின் பி40 5ஜி அலைபேசியில் சைபர் பாதுகாப்பு மீறப்படும் அபாயம் உள்ளது. பிளே ஸ்டோர் போன்று அதிலுள்ள ஆப்கேலரி, பயனர்களை மூன்றாம் நபர்களின் இ-காமர்ஸ் தளத்திற்கு மாற்றுகிறது. அது ஆபத்தான வைரஸ்களை கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது. ஒன்பிளஸின் 5ஜி மாடலும் ஆய்வு செய்யப்பட்டது, ஆனால் அதில் எந்த பிரச்னையும் இல்லை. இவ்வாறு கூறியுள்ளனர்.

இந்த அறிக்கைக்கு ஜியோமி நிறுவனம் தரப்பில் இதுவரை விளக்கம் ஏதும் வெளியாகவில்லை. ஹூவாவே நிறுவனம் மட்டும் தாங்கள் தொழில் செய்யும் நாடுகளின் சட்டத் திட்டங்களுக்கு கட்டுப்பட்டே செயல்படுவதாக கூறியுள்ளது. சைபர் பாதுகாப்பு மற்றும் பிரைவசிக்கு முன்னுரிமை தரப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். “ஹவாய் அலைபேசிக்கு வெளியே எந்த தரவுகளும் கையாளப்படுவதில்லை. 'ஆப் கேலரி' மற்ற ஆப் ஸ்டோர்களைப் போலவே செயலிகளை தேடுவதற்கும், நிறுவுவதற்கும் மற்றும் நிர்வகிப்பதற்கும் தேவையான தரவை மட்டுமே சேகரித்து கையாள்கிறது.” என கூறியுள்ளனர்.