"தத்வமஸி' என்கிற சம்ஸ்கிருத வார்த்தைக்கு "நீயே அதுவாகிறாய்' என்று பொருள். 

#spiritual
Kesariat day's ago

கார்த்திகை மாதத்தில் மாலை அணிவதோடு,பக்தி பரவசத்தோடு, 48 நாள்கள் விரதமிருந்து, அடர்ந்த மலைகளினூடே நடந்து, மகர சங்கராந்தி தினத்தில் புனிதமான பதினெட்டு படிகளில் ஏறி ஐயப்ப சந்நிதானத்தை அடையும் பக்தர்களின் கண்ணில் படும் வாசகம்

"தத்வமஸி'!

"தத்வமஸி' என்கிற சம்ஸ்கிருத வார்த்தைக்கு "நீயே அதுவாகிறாய்' என்று பொருள். 

சபரிமலையில் வீற்றிருக்கும் நைஷ்டிக பிரம்மச்சாரியான ஐயப்பனும் நீயும் ஒன்று என்று அறிவிக்கிறது "தத்வமஸி'. 

எப்போது கழுத்தில் ருத்ராட்ச, துளசி மாலையணிந்து 48 நாட்கள் விரதம் இருக்க ஒரு பக்தன் தொடங்குகிறானோ, அப்போதே அவன் சுவாமி ஐயப்பனாகி விடுகிறான். அதனால்தான் சபரிமலை ஐயப்பனைப் போலவே மாலையிடும் ஒவ்வொரு பக்தனும் பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிக்கிறார். தன்னை ஐயப்பனாகவே உருவகப்படுத்திக் கொள்கிறார். தன்னில் இருக்கும் 
ஐயப்பனை உணர முற்படுகிறார்.

எங்கும் நிறைந்த பரம்பொருள் உன்னிலும் இருப்பதால், நீயும் பரம்பொருளே என்பதுதான் ஜகத்குரு ஆதிசங்கரர் தேர்ந்து தெளிந்து மானிட இனத்துக்கு அருளிய அத்வைதம் என்கிற தத்துவ ஞானம். அந்த அத்வைதத்தின் விளக்கம்தான் "தத்வமஸி'. அதன் நடைமுறை விளக்கம்தான் ஐயப்ப பக்தி அல்லது சபரிமலைப் பயணம்.

ஹைந்தவ புராணங்களில் ஐயப்பன் குறித்து அதிக அளவிலான குறிப்புகள் இல்லைதான். ஆதிசங்கரர் உருவாக்கிய சைவம் (சிவ வழிபாடு), வைஷ்ணவம் (விஷ்ணு வழிபாடு), சாக்தம் (சக்தி வழிபாடு), காணபத்யம் (கணபதி வழிபாடு), சூர்யம் (சூர்ய வழிபாடு), கெளமாரம் (முருகக் கடவுள் வழிபாடு) ஆகியவற்றில் ஐயப்ப  வழிபாடு கிடையாது. ஆனால் இந்த ஆறு வழிபாடுகளின் ஒட்டுமொத்த பலனையும் அளிக்கவல்லது என்பதையும், அவற்றை உள்ளடக்கியது என்பதும்தான் ஐயப்ப வழிபாட்டின் தனித்துவமும் மேன்மையும்.

ஐயப்பன் குறித்துப் பல செவிவழிச் செய்திகளும், புராணக் கதைகளும், தல புராணங்களும் காணப்படுகின்றன. அமுதத்திற்காகப் பாற்கடலைக் கடையும்போது, மகாவிஷ்ணு மோகினியாக உருவம் எடுத்துக் கொள்வதும், அவர் மீது சிவபெருமான் மோகம் கொண்டு குழந்தை பிறந்ததும், ஹரிக்கும் ஹரனுக்கும் பிறந்த அந்தக் குழந்தைதான் இருவருடைய அம்சங்களும் உடைய ஹரிஹரசுதன் எனும் ஐயப்பன் என்கிற புராணக் கதை அனைவருக்குமே தெரிந்த ஒன்று.

அந்தக் குழந்தையை, புத்திர பாக்கியம் இல்லாத பந்தள ராஜா எடுத்து வளர்த்தியதும், அதற்குப் பிறகு அவருக்கு ஒரு குழந்தை பிறந்ததும், வளர்ப்பு மகன் ஐயப்பனைப் புலிப்பால் கொண்டு வர வளர்ப்பு அன்னையான ராணி பணிப்பதும், புலிப்பாலுக்காகப் புலிக்கூட்டத்தையே ஐயப்பன் கூட்டிக் கொண்டு வந்ததும் செவிவழிக் கதையாகப் பல நூற்றாண்டுகளாக ஐயப்ப புராணமாகப் பேசப்படுகிறது.

மகிஷாசுரனை பார்வதிதேவி துர்கையாகத் தோன்றி வதம் செய்ததுபோல, மகிஷி என்கிற அரக்கியை வதம் செய்வதற்கு சிவன், விஷ்ணு இருவரின் அம்சங்களையும் உள்ளடக்கிய ஹரிஹரபுத்திரனான ஐயப்பன் அவதாரம் எடுத்ததாகச் சொல்வதும்கூட பரவலாகப் பகிர்ந்து கொள்ளப்படும் புராணக் கதை. இவற்றுக்கெல்லாம் புராணங்களில் ஆங்காங்கே சில குறிப்புகள் காணப்படுகின்றன.

பெளத்தத்துக்கும், சபரிமலைக்கும்கூடத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. சபரிமலைக் கோயிலின் அமைப்பே பெளத்தக் கட்டடக் கலையின் வடிவில் அமைந்திருப்பதாகச் சுட்டிக் காட்டுகிறார்கள். "சரணம்' என்கிற வார்த்தை பெளத்தத்திலிருந்துதான் வந்திருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. புத்தரை ஆசிரியர் என்று அழைப்பார்கள். ஐயப்பன் ஞான குருவாக வழிபடப்படுகிறார். ஜாதி, மத வேறுபாடுகள் இல்லாமல், ஆசார அனுஷ்டானங்களும், மந்திரங்களும் இல்லாமல் ஐயப்ப வழிபாடு இருப்பதே பெளத்தத்தின் தாக்கத்துக்குச் சான்றாகக் கருதுகிறார்கள்.

இந்தியாவில் பரவலாகக் கோலோச்சி வந்த பெளத்த மதம், ஆதிசங்கரரின் வருகைக்குப் பிறகு தனது செல்வாக்கை இழந்ததாக அறியப்படுகிறது. அந்த அடிப்படையில் பார்த்தால், பெளத்த வழிபாடு ஐயப்ப வழிபாடாகி இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 
தர்ம சாஸ்தா வழிபாடு என்பது கேரளம், தமிழ்நாட்டைக் கடந்து அகில இந்திய அளவிலும், உலகளாவிய அளவிலும் கோடிக்கணக்கான பக்தர்களை சபரிமலைக்கு இழுத்திருக்கிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள், காடு வழியாக நடந்து சென்று வழிபடும் உலகின் மிகப் பெரிய புனிதத் தலமாக சபரிமலை மாறிவிட்டிருக்கிறது. 

ஏழை, பணக்காரன், ஜாதி வேறுபாடுகள், மதமாச்சரியங்கள், மொழி, நாடு உள்ளிட்ட பாகுபாடுகள் அனைத்தையும் கடந்து, "பக்தி' என்கிற ஒரேயொரு மந்திரச் சொல்லுக்கு ஆட்பட்டு, "சுவாமியே சரணமய்யப்பா' என்கிற சரண கோஷத்துடன் ஆண்டுதோறும் பக்தர்கள் மேற்கொள்ளும் சபரிமலைப் புனிதப் பயணத்துடன் ஒப்பிட இன்னொரு பயணம் இல்லை என்றுதான் கூற வேண்டும்.
சபரிமலைத் தீர்த்த யாத்திரை கார்த்திகை மாதம் ருத்ராட்ச, துளசி மாலைகளணிந்து விரதம் இருப்பதில் தொடங்குகிறது. சைவத்தின் அடையாளமான ருத்ராட்சமும், கிருஷ்ணனுக்கு உகந்த துளசியும் ஐயப்ப பக்தர்களால் மாலையாக அணியப்படுவதேகூட, சைவ - வைஷ்ணவ இணக்கத்தை எடுத்தியம்பு வதற்காகத்தான் என்று கூற வேண்டும். பல முறை சபரிமலை யாத்திரை மேற்கொண்ட குரு ஒருவரின் ஆசியுடன் மாலை அணிவது முதல், ஐயப்பனைப் போலவே பிரம்மச்சரியம் மேற்கொள்ளத் தொடங்குகிறார்கள் பக்தர்கள்.

தாங்கள் சபரிமலைக்குச் செல்ல பிரம்மச்சரியம் காக்கிறோம் என்பதை உணர்த்துவதற்காகத்தான் கருத்த உடை அணிவது. விரதம் இருக்கும் 48 நாட்களும் புலால் உண்பதையும், மது அருந்துவதையும் தவிர்ப்பது என்பது மட்டுமல்லாமல், ஒரு வேளை மட்டுமே உணவு உட்கொள்வது என்கிற பத்தியத்தைக் கடைப்பிடிப்போரும் உண்டு. மாத விலக்குள்ள பெண்களிடமிருந்து அகன்று இருப்பதும், மாலை வேளைகளில் ஏனைய ஐயப்பன்மார்களுடன் கோயிலுக்குப் போவது, ஐயப்ப பஜனையில் ஈடுபடுவது என்பனவும்கூடப் பலரால் கடைப்பிடிக்கப்படுகிறது. 

அபிஷேகத்துக்கான நெய்யைத் தேங்காயில் நிரப்பி, இருமுடிப் பையில் பத்திரப்படுத்திக் கொண்டு சக ஐயப்பன்மாருடன் கோஷ்டி கோஷ்டியாக சபரிமலைக்குப் பயணிக்கிறார்கள் ஐயப்பன்மார்கள்.

எருமேலி தர்ம சாஸ்தா ஆலயத்தில் தொடங்கும் சபரிமலைப் புனிதப் பயணத்தின் முதலாவது கட்டம் "பேட்டை துள்ளல்'. எருமேலி சாஸ்தா கோயிலிலிருந்து அங்கே இருக்கும் வாவர் மசூதி வரை, மலைவாழ் குடியினர்போல் வேடமணிந்து "பேட்டை துள்ளுவது' என்பது, ஆரம்ப காலங்களில் காட்டு வழியாக ஐயப்பன்மார்கள் பயணித்ததை நினைவூட்டுவதாக அமைகிறது.
இப்போது பெரிய பாதை என்று அழைக்கப்படும் வழியில் அழுதை மலை, அழுதை ஆறு, கல்லிடும் குன்று, ராமர் பாதம், கரிமலை, சின்ன யானைவட்டம், பெரிய யானை வட்டம் ஆகியவற்றைக் கடந்து பம்பையை அடைய வேண்டும். பம்பையில் நீராடி, மாலையில் பம்பை விளக்கு, பம்பை விருந்து ஆகியவற்றை முடித்த பிறகு நீலிமலை, சபரிபீடம், சரங்குத்தி ஆகியவற்றைக் கடந்து பதினெட்டாம் படியை அடைவார்கள் ஐயப்பன்மார்கள். பதினெட்டு படிகளை தலையில் இருமுடியுடன் ஏறினால் சந்நிதானம். ஐயப்பனை தரிசித்து, இருமுடியில் கொண்டுவந்த நெய்யால் ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்து மகிழ்வதுடன் புனிதப்பயணத்தின் நோக்கம் நிறைவேறுகிறது.

சபரிமலை யாத்திரையின் உச்சகட்டம், மகர ஜோதி தரிசனம். மலையாள மாதம் மகரம் பிறக்கும் வேளையில், அதாவது  நமது தை மாதப் பிறப்பையொட்டி, பகல் முடிந்து இரவு தொடங்கும் அந்த சங்கிரம நேரத்தில், முதலில் ஒரு நட்சத்திரம் குதித்தெழும். எங்கிருந்தோ ஒரு பருந்து ஆண்டுதோறும் அந்த ஒரே ஒரு நாளில் மட்டும் பறந்துவரும். சபரிமலை ஐயப்பன் கோயிலை மூன்று முறை வட்டமடித்துப் பறந்துவிட்டு, வந்ததுபோலவே அந்தப் பருந்து பறந்து மறைந்துவிடும்.

அதற்குப் பிறகு சில நிமிடங்களுக்குப் பின் சபரிமலையிலிருந்து தொலைவில் தெரியும் பொன்னம்பல மேட்டில் ஜோதியொன்று தெரியும். பொன்னம்பல மேட்டில் உள்ள ஐயப்பனுக்கு இந்திராதி தேவர்கள் மகர சங்கிரம வேளையில் தீபாராதனை காட்டி வணங்குவதாக ஐதிகம். ஐயப்ப பக்தர்கள் அந்த மகர ஜோதியை தரிசிப்பதை வாழ்நாள் பேறாகக் கருதுகிறார்கள். மகர ஜோதி தரிசனத்துடன்தான் சபரிமலை யாத்திரை நிறைவு பெறுகிறது.

மகாவிஷ்ணுவுக்கு 108 திவ்ய úக்ஷத்திரங்கள் இருப்பதுபோல, ஐயப்பனுக்கு கேரளத்தில் 108 கோயில்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றுள் ஆறாட்டுபுழை, அச்சன்கோவில், ஆரியங்காவு, செம்ரவட்டம், எருமேலி, குளத்தூப்புழை, பத்தனம்திட்டை, பொன்னம்பலமேடு, சாஸ்தாம்கோட்டை, திருவுளக்காவு, பந்தளம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

முருகனுக்கு அறுபடை வீடு இருப்பதுபோல, சாஸ்தாவுக்கும் நான்கு படை வீடுகள் உண்டு. குளத்தூப்புழை, சபரிமலை, ஆரியங்காவு, அச்சன்கோவில் என்பதுதான் அந்த நான்கு படைவீடுகள். அவற்றில், சபரிமலையில் மட்டும்தான் ஐயப்பன் நைஷ்டிக பிரம்மச்சாரியாக தவக் கோலத்தில் இருப்பதாக ஐதிகம்.

ஐயப்பனின் நான்கு படை வீடுகளில் முதலாவது வீடு ஐயப்பன் குழந்தையாகக் காட்சி அளிக்கும் குளத்தூப்புழை.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் பத்தனாபுரத்துக்கு அருகில் இருக்கிறது குளத்தூப்புழை. கல்லடை எனும் ஆற்றின் கிளை நதியான குளத்தூப்புழைக் கரையில் அமைந்திருக்கும் இந்த தர்ம சாஸ்தா ஆலயத்தைப் பரசுராமர் ஸ்தாபித்ததாக அதன் தலபுராணம் தெரிவிக்கிறது.

குளத்தூப்புழையில் ஐயப்பன் குழந்தை வடிவமாக, பால சாஸ்தாவாகக் காட்சியளிக்கிறார். சாஸ்தாவின் விக்ரகம் எட்டு வெவ்வேறு கற்களால் உருவாக்கப்பட்டது என்பதுதான் இதன் மகத்துவம். குளத்தூப்புழை சாஸ்தா கோயிலில் உள்ள குளம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தக் குளத்தில் ஆயிரக்கணக்கில் மீன்கள் காணப்படும். இந்த மீன்களுக்கு உணவளிப்பது என்பதுதான் "மீனூட்டு' என்கிற சிறப்பு வழிபாடு. அந்த மீன்கள் ஐயப்பனின் குழந்தைகள் என்கிற பொருளில் "ஐயப்பன்டே திருமக்கள்' என்று பக்தர்களால் வாஞ்சையுடன் அழைக்கப்படுகின்றன.

இந்தக் கோயில் குளத்தில் உள்ள மீன்களுக்கு "மீனூட்டு' அளிப்பதன் மூலம் வெள்ளைப் புள்ளி உள்ளிட்ட தோல் தொடர்பான நோய்கள் குணமாவதாக நம்பப்படுகிறது. 

ஐயப்பனின் இரண்டாவது படை வீடு, ஐயப்பன் பிரம்மச்சாரியாகக் காட்சி அளிக்கும் சபரிமலை. இது குறித்த விவரம் அனைவருக்குமே தெரியும்.

ஐயப்பனின் மூன்றாவது படைவீடு தமிழக எல்லையை ஒட்டி செங்கோட்டைக்கு அருகில் அமைந்திருக்கும் ஆரியங்காவு. ஆரியங்காவு ஆலயமும் பரசுராமரால் நிறுவப்பட்டது என்பதுதான் ஐதிகம். ஆரியங்காவில் ஐயப்பன் இளைஞராகக் காட்சி அளிக்கிறார்.

ஒய்யாரமாக யானையின்மீது தனது இடது காலை மடக்கியபடி, வலது காலைத் தொங்கப் போட்டபடி அமர்ந்து காட்சி அளிக்கும் ஐயப்பனின் ஒருபுறம் அவரது தேவி பிரபாவும் இன்னொருபுறம் சிவபெருமானும் காட்சியளிக்கிறார்கள். தமிழக, கேரள கட்டடக் கலைகளின் கலவையாகத் தோற்றமளிக்கிறது ஆரியங்காவு ஐயப்பன் கோயில்.

தென்காசி - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில், கேரள எல்லைக்குள் நுழைந்தவுடன் காணப்படும் ஆரியங்காவு ஐயப்பன் கோயில் சாலையிலிருந்து 35 அடி கீழே அமைந்திருக்கிறது. சபரிமலை போலவே இங்கேயும் 18 படிகள் காணப்படுகின்றன. ஐயப்பனுடன் யானை மீது காணப்படும் பிரபா என்கிற தேவியை, சபரிமலையின் மாளிகைப்புரத்தம்மன் என்றும், ஐயப்பனின் சக்தி என்றும் கூறுகிறார்கள்.

ஐயப்பனின் நான்காவது படைவீடு அச்சன்கோவில். சபரிமலையைப் போலவே அடர்ந்த கானகத்திற்குள் அச்சன்கோவில் ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் இந்தக் கோயிலிலும் 18 படிகள் காணப்படுகின்றன. கேரளத்தவர்களைவிட இந்தக் கோயிலுக்குத் தமிழகத்திலிருந்துதான் அதிகமான பக்தர்கள் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதை அய்யனார் கோயில் என்றும் பலர் கருதுகிறார்கள்.
சபரிமலையில் ஐயப்பன் நைஷ்டிக பிரம்மச்சாரி  என்றால், அச்சன்கோவிலில் அவர் கிருகஸ்தராக, பூர்ணா - புஷ்கலா சமேதராகக் காட்சி அளிக்கிறார். பூர்ணா, புஷ்கலா என்று இரண்டு தேவியருடன் குடும்பஸ்தராகக் காட்சி அளிக்கும் தர்மசாஸ்தாவை, திருத்தணிகை முருகனுடன் ஒப்பிடலாம். ஐயப்பன் குடும்பஸ்தராகக் காட்சி அளிக்கும் ஒரே திருத்தலம் நான்காவது படைவீடான அச்சன்கோவிலில்தான்.

அச்சன்கோவிலில் உள்ள தர்மசாஸ்தா விக்ரகம் ருத்ராட்ச சிலை என்று கூறப்படுகிறது. ஐயப்பனின் வலது கரத்தில் காணப்படும் சந்தனமும், தீர்த்தமும் மருத்துவ குணமுடையதாகக் கருதப்படுகிறது. அச்சன்கோவில் ஐயப்பன் மகா வைத்தியர் என்று அழைக்கப்படுகிறார். எல்லாவித நோய் நொடிகளிலிருந்தும் நிவாரணம் பெற பக்தர்கள் அச்சன்கோவிலுக்கு வருகிறார்கள்.

தல புராணங்கள், செவிவழிச் செய்திகள், கனவுகள் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால், ஐயப்ப வழிபாடு என்பது உயர்ந்த அத்வைத தத்துவத்தின் அடையாளம் என்பதை நாம் உணரலாம். இறைவன் வேறு, மனிதன் வேறு அல்ல என்றும், மனிதன் தன்னை இறைப் பரம்பொருளுக்கு முழுமையாக ஒப்படைத்து ஐக்கியமாகிவிடும்போது இறைவனாகவே மாறி விடுகிறான் என்பதையும் தான் "தத்வமஸி' உணர்த்துகிறது.

சபரிமலையில் பெண்களுக்கு உரிமை மறுக்கப்படுகிறது என்கிற தவறான கருத்து ஒருபுறம் பரப்பப்படுவது, சபரிமலை குறித்த புரிதல் இல்லாமையின் வெளிப்பாடு, அவ்வளவே. ஐயப்பன் நைஷ்டிக பிரம்மச்சாரி என்று நம்புகிறார்கள் பக்தர்கள். அவரது பிரம்மச்சரியம் கலைந்துவிடக் கூடாது என்று கவனமாக இருக்கிறார்கள் அவ்வளவே!

ஜாதி, மத, ஏழை, பணக்கார, மொழி, இனப் பாகுபாடுகளைக் கடந்து "சுவாமியே சரணம்' என்று ஐயப்பனின் திருவடிகளை முழுமையான அர்ப்பணிப்பு உணர்வுடன் தஞ்சமடையும் உன்னதம்தான் ஐயப்ப வழிபாடு! சுவாமி சரணம்!

பதினெட்டின் தத்துவம்

சபரிமலையில் ஐயப்பனுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவமோ, அதே அளவு முக்கியத்துவம் பதினெட்டு படிகளுக்கும் உண்டு. ஹைந்தவ மதத்தில் 18 என்கிற எண்ணுக்குப் பல முக்கியத்துவங்கள் உண்டு. வேத வியாசர் எழுதிய புராணங்களும், உப புராணங்களும் 18. 18 நாட்கள் நடந்த குருúக்ஷத்திர யுத்தத்தில் 18 வகைப் படைகள் இருந்தன. மகாபாரதத்தில் 18 பர்வங்கள் அல்லது பகுதிகள் உள்ளன. பகவத் கீதையில் 18 அத்தியாயங்கள் உள்ளன.

சபரிமலைக் கோயிலில் 18 படிகள் இருப்பதுபோலவே, அந்தக் கோயில் 18 மலைகளால் சூழப்பட்டிருக்கிறது என்பதுதான் அதைவிட ஆச்சரியம். பொன்னம்பலமேடு, கெளண்டன்மலை, நாகமலை, சுந்தரமலை, கரிமலை, மாதங்க மலை, மயிலாடும் மலை, ஸ்ரீபாதமலை, தேவர் மலை, நிலக்கல் மலை, தலைப்பாறை மலை, சிற்றம்பல மலை, கல்கிமலை, புதுசேரிமலை, காளகெட்டிமலை, இஞ்சிப்பாறை மலை, சபரிமலை, நீலிமலை என்கிற18 மலைகளை உணர்த்துவதுதான் 18 படிகள் என்றும் சொல்லப்படுவதுண்டு.

18 படிகளில் முதல் ஐந்து படிகள், மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து இந்திரியங்களையும், அடுத்த எட்டு படிகள் காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம், பேராசை, பொறாமை என்கிற அஷ்ட ராகங்களையும், அடுத்த மூன்று படிகள் சத்வம், ரஜஸ், தமஸ் எனும் மூன்று குணங்களையும், கடைசி இரண்டு படிகள் வித்யை (ஞானம்), அவித்யை (அஞ்ஞானம்) ஆகியவற்றையும் குறிக்கின்றன.
மாலையிட்டு, விரதமிருந்து, இருமுடி கட்டி வரும் ஐயப்பன்மார்கள் "தத்வமஸி' என்பதை உணர்ந்தபடி பதினெட்டு படிகளில் ஒவ்வொரு படியாக அடியெடுத்து வைக்கும்போது, கர்மவினைகளை உண்டாக்கும் ஒவ்வொரு பழக்கமும் நம்மைவிட்டு விலகுகின்றன என்பது ஐதிகம்.

காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம், தற்பெருமை, அகங்காரம், பிறரை இழிவுபடுத்துதல், பொறாமை, இல்லறப்பற்று, புத்திர பாசம், பணத்தாசை, பிறவி வினை, செயல்வினை, பழக்கவினை, மனம், புத்தி என்று 18 படிகளும் நம்மை 18 பந்தங்களிலிருந்து விடுவிக்கின்றன என்றும்கூட ஒரு விளக்கம் தரப்படுகிறது.

நாமும் இப்படிமுறைகளை கடைப்பிடித்து நம் வாழ்வில் வெற்றி பெறுவோமாக!