அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சி தலைவர் பதவிக்கு தேர்வான முதல் கறுப்பின எம்.பி

Prasuat month's ago

அமெரிக்காவில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் (கீழ்சபை) மொத்தம் உள்ள 435 இடங்களுக்கும், செனட் சபையில் (மேல்சபை) 105 இடங்களில் 35 இடங்களுக்கும் கடந்த மாதம் 8-ந் தேதி தேர்தல் நடந்தது. அதில் ஜனாதிபதி ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சி செனட் சபையை கைப்பற்றியது. பிரதிநிதிகள் சபையில் குடியரசுக் கட்சியினர் மெலிதான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார்கள்.

(கீழ்சபை)பிரதிநிதிகள் சபையை குடியரசு கட்சி கைப்பற்றி விட்ட நிலையில், பிரதிநிதிகள் சபை சபாநாயகர் மற்றும் ஜனநாயக கட்சி தலைவர் பதவியில் இருந்து நான்சி பெலோசி விலகவுள்ளார். வரும் ஜனவரியில் பிரதிநிதிகள் சபையின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக பெலோசி நவம்பரில் அறிவித்தார்.

இதனையடுத்து பிரதிநிதிகள் சபையில் ஜனாதிபதி ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சிக்கு புதிய தலைவர் பதவிக்கு நடந்த போட்டியில் ஹக்கீம் ஜெப்ரிஸ் வெற்றி பெற்றுள்ளார்.

இதன்மூலம், அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சியை வழிநடத்தும் முதல் கறுப்பினத்தவர் ஆக ஹக்கீம் ஜெப்ரிஸ்(52) உள்ளார். புதன்கிழமை கேபிடல் ஹில்லில் நடந்த கூட்டத்திற்குப் பிறகு ஜனநாயகக் கட்சியினர் ஜெப்ரிஸைத் தங்கள் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். அவர் அடுத்த ஆண்டு பொறுப்பேற்பார்.

வழக்கறிஞரான ஜெப்ரிஸ், 2013 முதல் ஜனநாயகக் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு பிரதிநிதியாக இருந்து வருகிறார்.அவர் 2019 முதல் ஜனநாயகக் கட்சியில் முக்கிய தலைவராக இருந்து வருகிறார்.

மேலும், அமெரிக்க நாடாளுமன்ற (பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை) ஒரு பெரிய கட்சியின் (ஜனநாயகக் கட்சி அல்லது குடியரசுக் கட்சி) இரு அவைகளிலும் தலைமைப் பதவிகளை வகித்த முதல் கறுப்பினத்தவர் என்ற பெருமை ஜெப்ரிஸ்க்கு வர உள்ளது.