தேமல் நோயும் ஆயுர்வேத தீர்வும்!

#Health #Disease #Treatment
Kesariat month's ago

மனித உடலின் மிகப்பெரிய உறுப்பு தோல் ஆகும். தோலின் முக்கியமான வேலை நமது உள் உறுப்புகளை வெயில், காற்று மற்றும் கிருமிகள் ஆகியவற்றிடமிருந்து வரும் இன்னல்களிலிருந்து பாதுகாப்பது. அதே காரணத்தால் தோல் அதிகமாக தாக்கப்பட்டு பல்வேறு நோய்களும் வரவும் காரணமாகிவிடுகிறது. அவ்வாறாக வரும் நோய்களில் முதன்மையாக உலகமெங்கும் வரும் ஒரு நோய் பூஞ்சை (Tinea Fungal Infection).

பூஞ்சை பொதுவாக காற்று, மண், தண்ணீர், தாவரங்கள் மற்றும் விலங்குகளில் சாதாரணமாக காணப்படும். பூஞ்சை தொற்றுகள் தாவரங்கள் மற்றும் விலங்குகள் இரண்டிற்கும் பொதுவானவை. நோயெதிர்ப்பு  அமைப்பு பூஞ்சையால் ஆக்கிரமிக்கப்பட்டு அதை எதிர்கொள்ள  முடியாதபோது மனிதர்கள் பூஞ்சைகளால் பாதிக்கப்படுகின்றனர். இது மேலோட்டமாகவும், உட்புறமாகவும் வரலாம். இங்கு மேலோட்டமாக வரும் பூஞ்சை நோய்களைப்பற்றி பார்ப்போம்.

மேலோட்டமான பூஞ்சை நம் நாட்டில் அதிகமாக காணப்படுகின்றது. அதற்கு முக்கிய காரணம் நமது தட்பவெப்ப நிலையும், சுகாதாரமற்ற தன்மையுமே ஆகும். பூஞ்சை தோல் நோய்களை நாம் வழக்கத்தில் ‘தேமல்’ என்று கூறிவருகிறோம். ‘தேமல்’ என்பது ஒரு பொதுவான தோல் நோயாகும். இது தோலில் வெள்ளைத் திட்டுகளை ஏற்படுத்துகிறது.

இந்த நுண்ணுயிர் உடலில் எப்பொழுதுமே வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது, ஆனால் ஈரப்பதம், மிதமான தட்பவெப்பநிலை, மோசமான சுகாதாரம் போன்ற பல சூழ்நிலைகள் காரணமாக, இது விரைவாகப் பெருகி, எரிச்சல், அரிப்பு மற்றும் தோலில் பிளவுகளை ஏற்படுத்துகிறது.

ஆயுர்வேதத்தில் உள்ள அனைத்து தோல் நோய்களும் ‘குஷ்டம்’ என்ற தலைப்பின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவை, மஹாகுஷ்டம் மற்றும் க்ஷுத்ரகுஷ்டம் என வகைப்படுத்தப்படுகின்றன. அவைகளில் தாத்ருவும் ஒன்று. இது கபம் பித்த ஆதிக்கம் கொண்ட ரக்தபிரதோஷஜா நோயாக ஆயுர்வேத நூல்களான சரக சம்ஹிதை, சுஷ்ருத சம்ஹிதையில் குஷ்ட சிகிச்சை பிரிவில் நன்கு விளக்கப்பட்டுள்ளது.

இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதாக பரவும் தன்மை உடையதால் ஒரே பாய், தலையணை, போர்வை, துண்டு, ஆடைகள், சோப்பு போன்றவற்றை பயன்படுத்தினால், மற்றவர்களுக்கு எளிதாக பரவிவிடும்.

இது உயிருக்கு ஆபத்தான அல்லது வலிமிகுந்த நோயாக இல்லாவிட்டாலும் கடுமையான மன உளைச்சலையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தக்கூடியது.மேலும் இதற்கு பெரிய அறிகுறிகள் கிடையாது, பொது ஆரோக்கியத்தில் தலையிடாது. இது இளைஞர்களிடமும் வெப்பமான மற்றும் ஈரப்பதமான காலநிலையிலும் மிகவும் பொதுவானது. உலக மக்களில் ஏறக்குறைய 15 சதவீத மக்களுக்கு இந்நோய் இருப்பதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.

ஆங்கில மருத்துவம் இந்நோயை TINEA என்று அழைக்கின்றது. பாதிக்கப்பட்ட இடத்திற்கு ஏற்ப இதற்கு துணைப்பெயர்களும் உண்டு.

 • மண்டை - டினியா கேபிடிஸ் (Tinea capitis)
 • உடல் - டினியா கார்போரிஸ் (Tinea carporis)
 • முழு உடல் மேற்பரப்பு - டினியா  யூனிவெர்சாலிஸ் (Tinea Universalis)
 • கழுத்து - டினியா வெர்சிகலர் (Versicolor)
 • முகம் - டினியா பாசிசி (Faciei)
 • தாடி - டினியா பார்பே (Tinea barbae)
 • இடுப்பு மற்றும் பிட்டம் - டினியா க்ரூரிஸ் (Tinea Cruris)
 • கை - டினியா மனுயம் (Tinea manuum)
 • பாதம் - டினியா பெடிஸ் (Tinea pedis)
 • நகங்கள் - டினியா அங்கியம் (Tinea Ungium)

காரணங்கள்

 • ஊட்டச்சத்து பற்றாக்குறை மோசமான நோய் எதிர்ப்பு சக்திக்கு வழிவகுக்கிறது, தொற்றுக்கு அதிக வாய்ப்பு ஏற்படுத்துகிறது.
 • மோசமான சுகாதாரம், மோசமான வாழ்க்கை நிலைமைகள், அதிகப்படியான வியர்த்தல், சூடான மற்றும் ஈரப்பதமான காலநிலை - இதனால் அதிகப்படியான வியர்வை, கிருமிகள், அழுக்கு, ஈரமான தோல் - பூஞ்சை நன்றாக வளர வழிவகுக்கும்.
 • பலவீனப்படுத்தும் / நாள்பட்ட நோய்கள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு.

ஹார்மோன் மாற்றங்கள்

 • நீரிழிவு - நீரிழிவு நோயாளிகள் பொதுவாக தோல் நோய்களுக்கு ஆளாகிறார்கள்
 • கார்டிகோஸ்டீராய்டுகள் பயன்படுத்துதல் நோயெதிர்ப்பு சக்தியை ஒடுக்கும். அதனால் பூஞ்சை படையெடுக்க அதிக வாய்ப்பு.

அறிகுறிகள்

முதன்மை அறிகுறிகள்: தோலில் திட்டுகள், செதில் அல்லது புள்ளிகள். இந்த திட்டுகள் பெரும்பாலும் சுற்றியுள்ள தோலை விட சற்று வெளுத்துக் காணப்படும்.இந்த திட்டுகள் பெரும்பாலும் தோள்பட்டைகள், கழுத்து மற்றும் உடற்பகுதியில் ஏற்படும், ஆனால் அவை சில நேரங்களில் வயிறு அல்லது முகத்தில் கூட தோன்றலாம்.திட்டுகள் பெரும்பாலும் கூர்மையான எல்லைகள் அல்லது விளிம்புகளைக் கொண்டுள்ளன. மேலும் அவை வெயிலில் கருமையாகாது. இதனால்தான்  வெயிலில் சில நேரம் இருந்த பிறகு நம் சருமத்தின் எஞ்சிய பகுதிகள் கருமையடையும் போது, இந்த திட்டுகள் அதிகமாக தெரியும்.

இந்த திட்டுக்கள் சமயத்தில் அரிப்பை ஏற்படுத்தும். சொறியச்சொறிய எரிச்சலையும் ஏற்படுத்தலாம். இந்த புள்ளிகள் அடிக்கடி வந்து போக வாய்ப்புண்டு, குறிப்பாக, பருவநிலை மாறும்போதும் வெளிப்புற வெப்பநிலையில் மாற்றங்கள் இருக்கும்போதும் வானிலை வெப்பமாகவும் ஈரப்பதமாகவும் இருக்கும் போதும் (கோடை காலத்தைப் போல) புள்ளிகள் மிகவும் கவனிக்கத்தக்கதாக மாறும் மற்றும் இலையுதிர் மற்றும் குளிர்காலத்தில் குறைவாக கவனிக்கப்படலாம் அல்லது மறைந்துவிடும் வாய்ப்பும் உண்டு.

படர்தாமரை

உடல் படைக்கு இன்னொரு பெயர் படர் தாமரை (Ring worm). நம்மிடம் மிக சகஜமாகக் காணப்படும் நோய் இது. உடல்பருமன் உள்ள பெண்களிடம் இது அதிகம் காணப்படுகிறது. முக்கியமாக, ஈரத்தில் வேலை செய்யும் பெரும்பாலான பெண்களுக்கு இடுப்பைச் சுற்றி, இது இருக்கும்.

தேமல் மருத்துவம்

தேமல் பொதுவாக தானாகவே போய்விடாது, எனவே சிகிச்சை அடிக்கடி தேவைப்படுகிறது. சிகிச்சையின் காலம் நபருக்கு நபர் மாறுபடும். சிகிச்சை தொடங்கியதிலிருந்து, பூஞ்சையின் வளர்ச்சியைத் தடுக்க, ஒன்று முதல் நான்கு வாரங்கள் ஆகலாம். பெரும்பாலான மக்கள் மேல் பூச்சு மருந்துகளைக் கொண்டு பூஞ்சை நோயை அகற்ற முயல்கிறார்கள். இருப்பினும், இந்த நோய்கள் மீண்டும் மீண்டும் குறிப்பாக சூடான, ஈரப்பதமான காலநிலையில் வாழ்பவர்களுக்கு வந்துகொண்டே இருக்கும்.

சில மருத்துவர்கள் மாதத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை மருந்து கலந்த க்ளென்சரைப் பயன்படுத்த பரிந்துரைக்கின்றனர். சிலர் எதிர்காலத்தில் சொறி வராமல் தடுக்க பூஞ்சை எதிர்ப்பு கிரீம்கள் மற்றும் லோஷன்களை அவ்வப்போது பயன்படுத்துவார்கள். ஆக இவை எதுவுமே நிரந்தர தீர்வு இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

சிகிச்சைக்குப் பிறகும், தோல் நிறம் இயல்பு நிலைக்குத் திரும்ப பல மாதங்கள் ஆகலாம் என்பதை நாம் புரிந்து செயல்பட வேண்டும்.

தேமலுக்கு ஆயுர்வேத மருத்துவம்

மேலே கூறிய பொதுவான காரணங்களுடன் கபம் மற்றும் பித்தத்தை அதிகரிக்கும் உணவு மற்றும் பழக்கவழக்கங்கள்,  பொருந்தாத உணவு, தவறான உணவு சேர்க்கைகள், கடல் வாழ் உயிரினங்களை அதிகமாக உட்கொள்வது, எளிதில் செரிமானமாகாத  உணவை உட்கொள்ளல், புளித்த தயிர் மற்றும் மோர், நீண்ட காலத்திற்கு அதிகமாக உட்கொள்ளுதல், உளுந்து அதிகப்
படியான உட்கொள்ளல், ஆயுர்வேத உடல் சுத்திகரிப்பு முறை சிகிச்சைகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமை ஆகியவை காரணங்களாக ஆயுர்வேதம் பார்க்கிறது.

ஆயுர்வேதம் இயற்கையின் வரங்களைப் பயன்படுத்தி எண்ணற்ற நோய்களுக்கு எந்தவித பக்க விளைவுகளும் இல்லாமல் சிகிச்சை அளிக்கும் அறிவை நமக்கு வழங்குகிறது. தேமல் நோய்க்கும் சிகிச்சையளிப்பதற்கு பல மருந்துகள் இருந்தாலும், ரத்தத்தை சுத்தி செய்து, நோயெதிர்ப்பு சக்தியை கூட்டி, குறைந்த செலவில், பாதுகாப்புடன் சிகிச்சைகள் அளித்து இந்நோய் நிரந்தரமாக வராமல் பாதுகாப்பதே ஆயுர்வேதத்தின் தனித்தன்மை.

தேமலுக்கு பஞ்சகர்ம சிகிச்சை

இந்த நோய் கபம் மற்றும் பித்தத்தின் காரணமாக ஏற்படுவதால், இந்த இரண்டு தோஷங்களையும் முதலில் அமைதிப்படுத்த ஆயுர்வேத பஞ்சகர்ம சிகிச்சைகளில் மிகவும் பிரசித்திபெற்ற வமனம் (Therapeutic Emesis), விரேசனம் (Therapeutic Purgation) மற்றும் ரக்த மோக்ஷன (Therapeutic Blood letting) சிகிச்சைகள் செயல்படுத்த வேண்டும்.

வெளிப்புற மருந்துகளாக மகாமரிச்சாதி தைலம், தத்ருக்ன லேபம், சித்தார்தக ஸ்நான சூர்ணம், முல்காதி ஸ்நான சூர்ணம், வேம்பு இலை அரைப்பு ஆகிய தைலம் மற்றும் பொடிகளை தேய்த்து குளிக்கவும், கழுவவும் பயன்படுத்தலாம்.  

வீட்டு வைத்தியம்

 • அருகம்புல், கஸ்தூரிமஞ்சள், மருதாணி இலை போன்றவற்றை அம்மியில் வைத்து அரைத்து பூச தேமல் குறையும்.
 • எலுமிச்சை தோலை உலர்த்தி தூளாக்கி சம அளவு பொரித்த படிகாரத்தை சிறிது தண்ணீர் சேர்த்து குழைத்து தேமலில் பூசி குளித்து வந்தால் தேமல் குறையும். மஞ்சளை இடித்து நல்லெண்ணெயில் காய்ச்சி தேமல் மேல் தேய்த்து வந்தால் தேமல் குறையும்.
 • குப்பை மேனி இலைகளுடன் மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து அரைத்து தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வர தேமல் குறையும்.
 • மலைவேம்பு இலைகளை அரைத்து அதன் சாறை தேமல் மீது பூசி வந்தால் தேமல் மற்றும் அரிப்பு குறையும்.

பயனுள்ள மூலிகைகள்

கார்போகிலரிசி, நீரடிமுத்து, பேய் புடல், வேம்பு, மலைவேம்பு, மஞ்சள், மரமஞ்சள், புங்கம், கொன்றை, ஊமத்தை போன்ற மூலிகைகளும் கந்தகம், மயில்துத்தம், அரிதாளம் போன்ற கனிமங்களும் ஆயுர்வேதத்தில் தேமல் நோய்க்கு மிகவும் பிரபலமாக பயன்படுத்தக் கூடிய மூலிகைகள் மற்றும் தாதுக்களாகும்.

ஆயுர்வேத மருந்துகள்

கந்தக ரசாயனம், மஞ்சிஷ்டாதி க்வாதம், மஹா மஞ்சிஷ்டாதி க்வாதம், கதிராரிஷ்டம், கைஷோர குக்குலு, ஆரோக்கியவர்த்தினி வடி, ஆரக்வதாதி கஷாயம், ஹரிதிரா காண்டம், மகாதிக்தக கஷாயம்,  பஞ்ச திக்தக குக்குலு, குக்குலு திக்தக கஷாயம் ஆகியவை தகுதி வாய்ந்த ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனையின் படி பஞ்சகர்ம சிகிச்சைகளுக்கு பின் எடுத்துக்கொள்ள இந்நோய் முற்றிலும் குணமடைவதுடன் மீண்டும் வராமல் தடுக்கலாம்.