பாகிஸ்தானில் போலீஸ் வாகனம் மீது தற்கொலைப்படை தாக்குதல் - 4 பேர் உயிரிழப்பு

Prasuat month's ago

பாகிஸ்தானும், அதன் அண்டை நாடான ஆப்கானிஸ்தானும் உலகிலேயே போலியோ நோய் தொற்றை முழுமையாக ஒழிக்காத நாடுகளாக உள்ளன.

அந்த வகையில் பாகிஸ்தானில் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து வழங்குவதன் மூலம் போலியோ பரவலை தடுக்க அந்த நாட்டு அரசு முயற்சித்து வருகிறது. ஆனால் அங்குள்ள பயங்கரவாதிகள் போலியோ தடுப்பு மருந்து வழங்குவது பாகிஸ்தான் குழந்தைகளை மலடாக்க மேற்கத்திய நாடுகள் செய்யும் சதி என குற்றம் சாட்டி, அரசின் இந்த முயற்சியை சீர்குலைத்து வருகின்றனர்.

அந்த வகையில் பாகிஸ்தானில் சமீப ஆண்டுகளாக போலியோ தடுப்பு மருந்து வழங்கும் மருத்துவ ஊழியர்கள் மற்றும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் போலீசாரை குறிவைத்து பயங்கரவாதிகள் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் அங்கு பலூசிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குவெட்டாவில் உள்ள பவேலி என்கிற இடத்தில் நேற்று போலியோ தடுப்பு மருந்து முகாம் நடந்தது. 

இதையொட்டி போலியோ தடுப்பு குழு ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக 20-க்கும் மேற்பட்ட போலீசார் போலீஸ் வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட ரிக்‌ஷாவை போலீஸ் வாகனத்தின் மீது மோதி வெடிக்க செய்தார். வெடிகுண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதில் அந்த பகுதியே அதிர்ந்தது.

குண்டு வெடிப்பில் சிக்கி 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 23 போலீசார் உள்பட 26 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

இதனிடையே இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலீபான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அரசுடன் செய்து கொண்ட சண்டை நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அந்த அமைப்பு கடந்த 2 நாட்களுக்கு முன்பு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

போலியோ தடுப்பு குழுவின் பாதுகாப்புக்காக சென்ற போலீசாரை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.