இலங்கை இறுதிக்கட்ட வங்குரோத்து நிலையில்! - அரசு மீது ராஜித குற்றச்சாட்டு

Prabhaat month ago

"சுபீட்சமான நாடாக இந்த நாட்டை மாற்றுவதற்காகக் கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசு வறியவர்களையும் யாசகர்களையும் உருவாக்கும் நிலைக்குத் தற்போது தள்ளப்பட்டுள்ளது."

- இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"இடதுகையால் கொடுப்பது வலது கைக்கு தெரியாது என்ற நிலைமையே நாட்டில் தற்போது நீடித்து வருகின்றது. இந்த நாடு இன்று இறுதிக்கட்ட வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது.

நாட்டில் 11.7 வீதமானோர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்கின்றனர். நாட்டை ஆட்சி செய்த ஒவ்வொரு அரசுகளிலும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் தொகை காணப்பட்டது.

நூற்றுக்கு நான்கு, ஐந்து சதவீதங்களில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் காணப்பட்டனர்.

எனினும், இந்த அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் கடப்பதற்கு முன்பு வறுமைக்கோட்டுக் கீழ் வாழுவோரின் எண்ணிக்கை 11.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.

அதாவது இந்தச் சமூகத்தில் புதிததாக 7 சதவீமானோர் வறுமைக்கோட்டுக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

நல்ல நிலையில் வாழ்ந்த மக்களை வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களாக இந்த அரசு மாற்றியுள்ளது.

ஒன்றறை வருடங்களுக்குள் 7 சதவீதமானோரை வறுமைக்கோட்டுக்குகள் தள்ளிய அரசை உலகில் வேறு எந்த நாடுகளிலும் நாம் பார்க்கவில்லை.

எமது நாட்டில் ஒரு சதம் எத்தனை காணப்பட்டாலும் அந்தச் சதத்தால் எந்தவொரு பிரயோசனமும் இல்லை. வெளிநாடுகளிலிந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்கு டொலரே எமக்குத் தேவைப்படுகின்றது.

வெளிநாடுகளில் உண்ணும் உணவு, ஆடைகள், அத்தியாவசிய மருந்துகள், உரம் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் கொண்டு வருவதற்கு அந்நியச் செலாவணி தேவைப்படுகின்றது; டொலர் தேவைப்படுகின்றது.

டொலரை ஒரு சதத்துக்கு வாங்க முடியாது. வெளிநாட்டு இருப்பே எமது நாட்டில் பெறுமதி வாய்ந்த ஒன்றாகக் காணப்படுகின்றது. அந்த வெளிநாட்டு இருப்புக்கு என்ன ஆகியுள்ளது?

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக மத்திய வங்கியின் டொலர் இருப்பு நேர்மறை பெறுமதிக்குச் சென்றுள்ளது" - என்றார்.
........