சாமிக்க கருணாரத்னவிற்கு எதிராக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை ஒழுக்காற்று நடவடிக்கை

kaniat day's ago

இலங்கை அணியின் சகலதுறை வீரர் சாமிக்க கருணாரத்னவிற்கு எதிராக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை ஒழுக்காற்று நடவடிக்கைளை அறிவித்துள்ளது.

இதன்படி, அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட அவருக்கு ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் போது போட்டி ஒப்பந்த விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில், மூவரடங்கிய விசாரணைக் குழு நடத்திய ஒழுக்காற்று விசாரணையில் சாமிக்க கருணாரத்ன குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்த ஒத்திவைக்கப்பட்ட போட்டித் தடைக்கு மேலதிகமாக, சாமிக்க கருணாரத்னவுக்கு 5000 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.