எங்களில் யாரும் மீதம் இருக்கமாட்டோம்" வருந்தும் அமேசான் பழங்குடி பெண்

Keerthiat month ago

காடழிப்பால் உடனடி அழிவை எதிர்நோக்கியிருக்கும் அமேசான் பழங்குடிகள். மூன்று நபர்கள் மிச்சமிருக்கிற அமேசானின் நாடோடிப் பழங்குடியான பிரிப்குரா மக்கள், சட்டவிரோதமான மரம் வெட்டுதல் மற்றும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் நடக்கும் விவசாயத்துக்கு எதிராகப் போராடித் தோற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

"அவர்களை நினைத்து பயப்படுகிறேன். அவர்களைக் கொன்றுவிடுவார்கள், எங்களில் யாரும் மீதம் இருக்கமாட்டோம்"

ரீட்டா பிரிப்குரா கேமராவை நோக்கி பேசியபோது, அவர் குரலில் இருந்த விரக்தி அதிர வைத்தது. தனது சகோதரன் பைட்டா, அவரது மகன் டமாண்டுவா ஆகியோரைப் பற்றி செப்டம்பரில் வெளியான இந்த காணொளியில் பேசுகிறார் ரீட்டா.

மத்திய பிரேசிலில் வாழும் பழங்குடியினரான பிரிப்குராவில் மீதம் இருப்பவர்கள் இவர்கள்தான். இவர்கள் வசிக்கும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்படுவதாலும் விவசாயம் நடப்பதாலும் இந்தப் பழங்குடியினர் உடனடி அழிவை எதிர்நோக்கியுள்ளனர் என்கிறார்கள் நிபுணர்கள்.

வெளியுலகில் இருப்பவர்களிடம் ரீட்டா அவ்வப்போது தொடர்பில் இருக்கிறார். ஆனால் பைட்டாவும் டமான்டுவாவும் அமேசான் காட்டில் தனியே சுற்றித்திரிகிறார்கள். ஆபத்தில்லாத அவர்களின் இந்த திரிதல்கூட அவர்கள் உயிரைக் குடித்துவிட்லாம் என ரீட்டா அச்சப்படுகிறார்.

தோற்றுக்கொண்டிருக்கும் போர்

பிரேசிலின் விவசாய வணிகத்தில் முக்கிய இடம் பிடித்திருக்கும் மாட்டோ க்ரோஸோ என்ற மாகாணத்தில் இருக்கிறது பிரிப்குரா வனப்பகுதி. இது சட்டரீதியாக அங்கீகரிகப்பட்ட, பாதுகாப்பான வனப்பகுதி என்றாலும் மரம் வெட்டுபவர்களும் விவசாயிகளும் இங்கு ஊடுருவியபடியே இருக்கிறார்கள்.

ஒரு தலைமுறையாக இவர்கள் ஊடுருவல்களைப் பார்த்துவந்தாலும், சமீபகாலங்களில் இது அதிகரித்திருக்கிறது. நவம்பர் மாதம் வெளியான ஓர் அறிக்கையில், காடழிப்பு புகைப்பட ரீதியாக ஆவணப்படுத்தப்பட்டது. ஆகஸ்ட் 2020 மற்றும் ஜூலை 2021க்கு இடைப்பட்ட காலத்தில் பிரிப்குரா வனப்பகுதியில் 24 கிலோமீட்டர் வனப்பகுதி அழிக்கப்பட்டதை அவ்வறிக்கை ஆதாரபூர்வமாக நிரூபித்தது. இது பரப்பில் 3,000 கால்பந்தாட்ட களத்துக்குச் சமமானது.

பிரேசிலின் பிற பழங்குடியினரும் இதைப் போலவே மரம் வெட்டிகள், விவசாயிகளோடு போராடுகிறார்கள் என்றாலும் பிரிப்குரா பழங்குடியினரின் நிலைமை மோசமாக உள்ளது.

"இவர்கள் அழிவின் விளிம்பில் இருக்கிறார்கள். இன்னும் சில நாட்களில் இவர்கள் கொல்லப்படலாம்" என்கிறார் லண்டனைச் சேர்ந்த பழங்குடியினர் தொண்டு நிறுவனமான சர்வைவல் இண்டர்நேஷனல் அமைப்பைச் சேர்ந்த சாரா செங்கெர்.

"பைட்டா மற்றும் டமாண்டுவாவுக்கு அருகில் ஊடுருவுபவர்கள் நெருங்கி வந்துவிட்டார்கள்" என்கிறார்.

"இந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் வெளியாட்கள் ஊடுருவி விட்டார்கள் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன" என்கிறார் லெனார்டோ லெனின். இவர் மாட்டோ க்ராஸோவின் பழங்குடியினருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் கொண்டவர். பிரேசில் அரசின் பழங்குடியினர் அமைப்பான ஃபுனாயின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் இவர்.

பிரிப்குரா மக்கள் பற்றிய அறிக்கையைத் தயாரிக்க உதவிய பழங்குடியினருக்கான மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் பொதுச் செயலாளராக இருக்கும் லெனின், இதற்கு முன்பு பைட்டாவோ டமாண்டுவோவோ காணப்பட்ட இடங்களிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் கூட காடு அழிப்பு வந்துவிட்டது என்கிறார்.

ஐந்து கிலோமீட்டர் என்பது பாதுகாப்பான தூரமாகத் தெரியலாம். ஆனால் 2,430 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட வனப்பகுதியில் இது மிகக்குறைவான தூரம்தான்.

"இவர்கள் பயங்கரமான ஆபத்தில் இருக்கிறார்கள், அதில் சந்தேகம் இல்லை. ஃபுனாய் மற்றும் பிரேசிலின் சூழல் பாதுகாப்பு அமைப்பின் ஆய்வாளர்களும் இந்த ஊடுருவிகளால் எச்சரிக்கப்பட்டது பற்றியும் எங்களுக்குத் தகவல்கள் வந்திருக்கின்றன" என்கிறார்.

தனித்து வாழும் பழங்குடியினரின் பிரச்சனைகள்

பிரிப்குரா மக்கள், தனித்து வாழுகிற, வெளியுலகிற்குத் தொடர்பில்லாத பழங்குடியினர். பொதுவாக தங்கள் அண்டை அயலாரிடமோ வெளியுலகத்தினரிடமோ இவர்கள் வழக்கமாகத் தொடர்பில் இருக்க மாட்டார்கள்.

உலகில் இதுபோன்ற வகைமையில் நூற்றுக்கணக்கான பழங்குடியினர் இருப்பதாக நம்பப்படுகிறது. அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் அமேசான் பகுதிகளில் காணப்படுகிறார்கள். பொதுவாக ஊடுருவுபவர்களுடன் வந்த சண்டைகளால்தான் இவர்கள் இப்படி வாழும் நிலைமை ஏற்படுகிறது. பிரிப்குரா மக்களுக்கும் அப்படி ஒரு வரலாறு உண்டு.

1970களில் பல பிரிப்குரா மக்கள் கொல்லப்பட்டனர். ஊடுருபவுபவர்களால் கொல்லப்பட்டு, வைரஸ் தாக்குதலுக்குப் பழகாத நோய் எதிர்ப்பு மண்டலம் கொண்டவர்களாக இருப்பதால் சளி, ஜலதோஷம் போன்ற சாதாரண நோய்களால் பலர் இறந்தனர்.

தனது சொந்தக்காரர்கள் ஒன்பது பேர் கொல்லப்பட்ட ஒரு நிகழ்வை நினைவுகூர்கிறார் ரீட்டா. "ஆக்கிரமிப்பாளர்கள் எல்லோரையும் கொன்றுவிட்டார்கள். நாங்கள் தப்பித்தோம்" என்கிறார்.

இதுபோன்ற நிகழ்வுகளால் ஏற்படும் கடுமையான உயிரிழப்பு ஒருபுறம் என்றால், இது இவர்களின் வாழ்க்கை முறையையும் மாற்றிவிடுகிறது என்கிறார் லெனின்.

"பிரிப்குரா மக்களின் மொழியில் விவசாயம் பற்றிய சொற்கள் உண்டு. அப்படியென்றால் ஒரு காலத்தில் இவர்களுக்கு விவசாயம் செய்யும் பழக்கம் இருந்திருக்கவேண்டும். ஆனால் 1970களுக்குப் பின் இவர்கள் வேட்டையாடுகிற, உணவு சேகரிக்கிற நாடோடி சமுகமாக மாறிவிட்டார்கள். தொடர்ந்து நகர்ந்துகொண்டேயிருப்பதன் மூலம் இவர்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்துகொள்கிறார்கள்" என்கிறார்.

1984ல் முதல்முறையாக ஃபுனாய் அமைப்பு பிரிப்குரா மக்களிடம் பேசியபோது, மொத்த வனப்பகுதியில் 15-20 பழங்குடியினர் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் 1990களுக்குப் பிறகு பைட்டா மற்றும் டமாண்டுவா ஆகிய இருவரை மட்டுமே பார்க்க முடிகிறது.

இதுபோலத் தனித்துவாழும் பழங்குடியினர்களைப் பற்றி நன்கு அறிந்த நிபுணர் ஃபாப்ரீசியோ அமோரிம், பிரிப்குரா மக்களுடனும் பணியாற்றியுள்ளார். முந்தைய சந்திப்புகளின்போது பைட்டாவும் டமான்டுவாவும் காடுகளில் சுற்றிக்கொண்டிருக்கும் பிற உறவினர்கள் பற்றிக் குறிப்பிட்டதாகக் கூறுகிறார்.

"ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இவர்கள் உறவினர்களைப் பற்றிப் பேசவில்லை. அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று இதை பொருள்படுத்திக்கொள்ள முடியாது என்றாலும் இந்த செய்தி கவலையளிக்கிறது" என்கிறார் அமோரிம். "பிரிப்குரா மக்கள் எத்தனை பேர் மீதமிருக்கிறார்கள் என்பது தெரியாததால் அவர்களின் நிலத்தைப் பாதுகாப்பது முக்கியமானதாக இருக்கிறது" என்கிறார்.

மூர்க்கமான அதிபர்

பிரிப்குரா வனப்பகுதியின் அழிப்புக்கு பிரேசில் அதிபர் சயீர் போல்சனாரோதான் காரணம் என்று பழங்குடியின உரிமை செயற்பாட்டாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அதிபராக பதவியில் அமர்வதற்கு முன்பே அமேசானை வணிக ரீதியாக சுரண்டுவதற்கு ஆதரவாகவும் பழங்குடியினருக்கான பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளுக்கு எதிராகவும் அவர் தொடர்ந்து குரல் எழுப்பியிருந்தார். பழங்குடியினருக்கான உரிமைகள் பிரேசிலின் அரசியலமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும் அவர் குரல் எழுப்பியபடியே இருந்திருக்கிறார்.

1998ல் கொரியோ பிரேசிலினீஸ் என்ற நாளிதழுக்குப் பேட்டியளித்த போல்சனாரோ, "அமெரிக்க ராணுவத்தைப் போல பழங்குடியினரை அழித்தொழிப்பதில் பிரேசில் ராணுவம் செயல்திறனோடு செயல்படவில்லை. இது அவமானகரமானது" என்றார்.

பிரேசிலின் தேசிய புள்ளிவிவர அலுவலகம், பிரேசிலின் மக்கள்தொகை 213 மில்லியன் என்று கணித்திருக்கிறது. அதில் 1.1 மில்லியன் மட்டுமே இருக்கும் பழங்குடியினருக்கு 13% நிலபரப்பைக் கொடுக்கக்கூடாது என்று அவர் வாதிடுகிறார். ஆனால் 1988ல் அமலுக்கு வந்த பிரேசிலின் அரசியலமைப்புச்சட்டத்தின்படி இந்த நில ஒதுக்கீடு அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.

1988 முதல் பதவிக்கு வந்த பிரேசில் அதிபர்களில், பழங்குடியினருக்கான நில ஒதுக்கீடு பற்றிய ஒரு உத்தரவில்கூட கையெழுத்திடாத முதல் அதிபர் போல்சனாரோதான். அவர் பதவிக்கு வந்ததிலிருந்து பழங்குடியினர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன என்று மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சட்ட நெருக்கடிகள்

நில பாதுகாப்பு உத்தரவு என்ற சட்ட அமைப்பின்படி பிரிப்குரா வனப்பகுதி பாதுகாக்கப்பட்டிருக்கிறது. அதிகாரபூர்வமாக வரையறுக்கப்படாத பழங்குடியினருக்கான பகுதிகளில் இதுவும் ஒன்று.

இந்த சட்ட உத்தரவுகள் அவ்வப்போது புதுப்பிக்கப்படவேண்டும். ஆனால் செப்டம்பரில் வந்த சமீபத்திய உத்தரவு, அடுத்த ஆறு மாதங்களுக்கு மட்டுமே பாதுகாப்புக் காலத்தை நீட்டித்திருக்கிறது. கடந்த ஆண்டுகளில் இந்த காலம் 18 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரை இருந்தது.

"இப்படி காலக்கெடு சுருக்கப்பட்டிருப்பது நல்லதல்ல. ஆக்கிரமிப்பாளர்கள் இந்தப் பழங்குடி நிலங்களை விரைவில் கைப்பற்றலாம் என நம்புவார்கள்" என்கிறார் அமோரிம்.

டிசம்பர் 2020ல் மற்றொரு கவலையளிக்கும் விஷயமும் நடந்தது. பிரேசிலைச் சேர்ந்த புவியியல் சார்ந்த ஓர் அரசு அமைப்பு, தங்கம் போன்ற நிலத்தடி கனிமங்கள் எங்கு காணப்படுகின்றன என்பதை விவரிக்கும் விரிவான வரைபடங்களை வெளியிடத் தொடங்கியது. முதற்கட்ட வரைபடங்கள் பிரிப்குரா மக்கள் வாழும் மாட்டோ க்ராஸோவில் உள்ள கனிம வளங்களைப் பற்றியவையாக இருந்தன.

"பிரிப்குரா மக்களுக்குத் தேவையான நிலப்பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு, மருத்துவ வசதி எல்லாவற்றுக்கும் நாங்கள் உதவுகிறோம். இங்கு ஊடுருவலைத் தடுக்கும் முயற்சிகளும் நடந்துவருகின்றன" என்று ஃபுனாய் அமைப்பு தெரிவித்தது.

"இதுபோன்ற சத்தியங்களால் மட்டும் எங்களது எதிர்காலத்தைக் காப்பாற்ற முடியாது" என்கிறார் ரீட்டா.

கரிபுனா வனப்பகுதியில் உள்ள ஒரு பழங்குடியினரை மணந்துகொண்டதால் அங்கு வசித்துவரும் ரீட்டா, மாட்டோ க்ரோஸோவில் ஃபுனாய் அமைப்பினர் செய்யும் பணிகளுக்கு உதவியாக இருக்கிறார். ஆனால் கொரோனாவுக்குப் பிறகு அவர் பிரிப்குரா வனப்பகுதிக்குச் செல்லவில்லை. ஆகவே இந்தப் பழங்குடியினரில் தான் மட்டுமே மீதம் இருக்கலாம் என்று அவர் அஞ்சுகிறார்.

"வனப்பகுதிக்கு ஒவ்வொரு முறை போகும்போதும் வெட்டப்பட்ட மரங்களைப் பார்க்கிறேன். அங்கு பல அயலார்கள் வந்துவிட்டார்கள்" என்று அவர் எச்சரிக்கிறார்.

"அவர்கள் என் சகோதரனையும் அவரது மகனையும் எளிதாகக் கொன்றுவிடலாம்" என்கிறார்.