ஜனாதிபதி சட்டத்தரணி தொடர்பாக புதிய வர்த்தமானி வௌியீடு

Pratheesat day's ago

ஜனாதிபதி சட்டத்தரணி நியமனம் தொடர்பான வழிகாட்டுதல்கள் அடங்கிய புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அங்கீகரிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை ஜனாதிபதியின் செயலாளர் பீ.பீ.ஜயசுந்தர விசேட வர்த்தமானியில் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

அதன்படி இனிமேல் ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவரை நியமிப்பதில் அந்த வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட வேண்டும்.

ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர புதிய வர்த்தமானி அறிவித்தலில் 14 வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளதுடன், 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் 29 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஜனாதிபதி சட்டத்தரணி நியமனம் தொடர்பான வழிகாட்டல்களை இரத்துச் செய்துள்ளார்.

புதிய வழிகாட்டுதல்களின்படி, ஜனாதிபதி சட்டத்தரணிகளின் நியமனம் வருடத்திற்கு அதிகபட்சமாக ஒரு குழுவாக வரையறுக்கப்பட்டுள்ளது மற்றும் வருடத்திற்கு நியமிக்கப்படும் ஜனாதிபதி சட்டத்தரணிகளின் எண்ணிக்கை 10க்கு மிகையாகாமல் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.