காதலும் காவல் நிலையமும். ஆம்! காதலுக்கு பாதுகாப்பு காவல் நிலையம் தான். காதல் விதிகள். பாகம் - 10.

#Love #Article #Tamil People
Kesariat month's ago

எல்லா காவல் நிலையங்களுமே திருமண வயதைக் கடந்த காதலர்களை தம்பதிகளாக மாற்ற பெரும் ஆதரவு தருகிறார்கள்.  அதனால் எந்த ஊருக்குத் தப்பி ஓடினாலும், முதல் வேலையாக அந்த ஊரில் இருக்கும் காவல் துறையினரிடம் தகவலைச் சொல்லி பாதுகாப்பு கேட்டுக்கொள்ள வேண்டும்.  பல காவல் நிலையங்களில் திருமணம் நடத்திவைக்கப்படுகிறித்து என்பதால் அங்கேயே மாலை மாற்றிக்கொள்ளலாம்.  ஆத்திரத்தில் இருக்கும் பெற்றோருக்கு காவல் துறை மூலமாகவே எச்சரிக்கை தர வைக்கலாம்.

விஷயம் தங்கள் கை மீறிப் போய்விட்டதை பெற்றோர் அறிந்தால், கண்டிப்பாக அதற்குப் பிறகு பிரச்சனை ஏற்படாது.  இப்படிப்பட்ட சூழலில் நகை, பணம், புடவை என அனைத்தையும் எடுத்துக் கொள்ளலாமா, வேண்டாமா என்பதை காதலர்கள்தான் முடிவெடுத்துக் கொள்ள வேண்டும்.  இவற்றை எடுப்பதால் பெற்றோ உஷாராகி விடக்கூடும் என்றால், இப்படிப்பட்ட முயற்சிகளில் இறங்காமல் இருப்பது நல்லது.

காவல் துறையினர் முன்னிலையில் காதலர்கள் மாலை மாற்றிக் கொண்டாலும், பதிவாளர் அலுவலகத்தில் ரிஜிஸ்டர் திருமணம் (பதிவுத் திருமணம்) செய்துகொள்வதே சட்டப்படி பாதுகாப்பானது.

மேலும், ஊரைவிட்டு வெளியேறும் சமயத்தில் தகவலை எப்படியாவது பெற்றோர் காதுகளில் விழும்படி செய்து விடுவது நல்லது.  ஏனென்றால், என்ன நடந்தது என தெரியாமல் பெற்றோர் தவறான வேறு முடிவுகள் எடுத்துவிடக் கூடாது.  இத்தகைய முடிவுகள் என்பது உயிருக்கு ஆபத்து வரலாம் என்றபட்சத்தில் மட்டுமே மேற்கொள்ளப் பட வேண்டும்.  முடிந்தவரை இத்தகைய நிகழ்ச்சிகள் நடக்காமல் பார்த்துக்கொள்வது நல்லது.

பெற்றோர்கள் மனத்தை மாற்ற முடியாதபட்சத்தில் கூட, அவர்களது வெறுப்பை சம்பாதிக்காமல், ஆதரவைப் பெற முயலாமலும் திருமணம் முடித்துக்கொள்வது நல்லது.  அதாவது பெற்றவர்களுக்கு உங்கள் மீது கோபம் வருவது இயற்கை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.  அவர்களது கோபத்துக்கு மதிப்பளிக்க வேண்டும்.  ஆனால் நீங்கள் அவர்கள் மீது எந்தவகையிலும் கோபப்படுவது நியாயம் இல்லை என்ற நிலையை உணர வேண்டும்.  அவர்களுக்கும் உணர்த்துவது வேண்டும்.

இப்படிப்பட்ட சூழலில் அவசரத் திருமணம் நடந்தாலும், விரைவில் அனைவரும் ஒன்று சேர வாய்ப்புகள் இருக்கும்.  அனைவரும் ஒன்று சேர முடிகிறதோ இல்லையோ, உறவினர்களில் சிலராவது கண்டிப்பாக ஆதரவு கொடுப்பார்கள்.

‘அலைபாயுத்தே படத்தில் காதலை பத்திரப்படுத்த ஒரு புதுமையான வழி ஒன்றை சொல்லியிருப்பார்கள்.  அதாவது காதலன், காதலி இருவரும் தங்கள் பாதுகாப்புக்காக சட்டப்படி திருமணம் செய்து கொள்வது.  அதேசமயத்தில் பெற்றோரை சமாதானப்படுத்த முடியும் என்ற நிலை உருவாகும்வரை, அவரவர் வீட்டிலேயே தொடர்ந்து இருந்துகொள்வார்கள்.  சமாளிக்க முடியாது என்ற சிக்கல் வரும்போது மட்டும் இருவரும் சேர்ந்து தனியாக வாழ்வது என்று அந்தக் காதலர்கள் முடிவெடுத்து செயல்படுத்துவார்கள்.

இதையும்கூட ஒரு நல்ல நடைமுறையாகக் கொள்ளலாம்.

பெற்றோர்கள் தரப்பில் ஆதரவு கிடைக்கவில்லை என்பதற்காக உறவினர்களை புறக்கணித்துவிடக் கூடாது.  எப்படி கைகளில் ஐந்து விரல்களும் ஒன்றாக இருப்பதில்லையோ அப்படியே தான் குடும்பத்தில் எல்லோருமே காதலுக்கு எதிர்ப்பு என்ற நிலையில் இருக்க மாட்டார்கள்.  எல்லோருடைய ஆதரவையும் பெற முயற்சிக்க வேண்டும்.  உண்மையாக ஆதரவு தெரிவிப்பவர்களிடம் எடுத்துச் சொல்லி, பெற்றோரின் மனத்தை மாற்ற முயற்சிக்க வேண்டும்.  பெற்றோர் தங்கள் எதிரிகள் அல்ல என்பதை மிகத் தெளிவாகவே பிரகடனம் செய்யுங்கள்.

காதல் என்பதும், வாழ்வு என்பதும் நமக்கும், நம்மைச் சேர்ந்த பலருக்கும் படமாக இருக்க வேண்டும்.  நமது சந்ததியினருக்கு வழி காட்டியாக இருக்க வேண்டும்.  காதலை ஜெயிப்பதற்காக அறவழியில் முடிந்தவரை நீங்கள் போராடியது ஒரு புரட்சியாக இருக்க வேண்டும்.  அதற்கு முடிவில் இருவரிடமும் முழு நம்பிக்கையும், தைரியமும் வேண்டும்.

போராடி வென்ற காதல் என்றென்றும் நினைக்கக்கூடியது. போற்றக்கூடியது.  பெற்றோருக்காக காதலை சிலர் விட்டுத்தருவதும் உண்டு.  அதனால், அவர்கள் காதல் உண்மையில்லை என எடுத்துக் கொள்ளக் கூடாது.

வெற்றிபெற்ற காதல் உயர்வானது என்றால் தோல்வியடைந்த காதல் அதனினும் உயர்வானது தான்.