உடல்நலம் பாதிக்கப்பட்ட 650 குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றி ஜான் சீனா கின்னஸ் சாதனை!

Prasuat month's ago

டபிள்யு.டபிள்யு.இ (WWE) மல்யுத்தப் போட்டியின் மூலம் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தவர் ஜான் சீனா. தனது தனித்துவுமான தாக்குதல் ஆட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களின் ஆதர்ச நாயகனாக விளங்குகிறார். ஹாலிவுட் சினிமாவில் நடிகராகவும் வலம் வரும் இவர் உடல்நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பல ஆண்டுகளாக தொடர்ந்து உதவி செய்து வருகிறார். 

அந்த வகையில் மேக் ஏ விஷ் என்ற அறக்கட்டளை மூலம் தீவிர உடல்நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் விருப்பங்களை ஜான் சீனா நிறைவேற்றி வருகிறார். இந்த அறக்கட்டளையானது தீவிர நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை அவர்களுக்கு பிடித்த பிரபல நபர்களை சந்திக்க உதவி செய்து வருகிறது. இதன் மூலம் அந்த பிரபலங்கள் உடல்நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்ற வருகின்றனர். 

இந்நிலையில், உதவி செய்வதில் ஜான் சீனா கின்னஸ் சாதனை படைத்துள்ளார். ஆம், இதுவரை மேக் ஏ விஷ் என்ற அறக்கட்டளை மூலம் தீவிர உடல்நலம் பாதிக்கப்பட்ட 650 குழந்தைகளின் விருப்பங்களை இவர் நிறைவேற்றியுள்ளார். அவர் இந்த அறக்கட்டளையின் மூலம் 2002 ஆம் ஆண்டு முதல் குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றி வருகிறார். இதுவரை மேக் ஏ விஷ் என்ற அறக்கட்டளை மூலம் அதிகளவிலான குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றியதாக கின்னஸ் சாதனைப் பட்டியலில் ஜான் சீனாவுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த அறக்கட்டளையின் மூலம் இதுவரை வேறு எந்த பிரபலங்களும் 200 குழந்தைகளின் விருப்பங்களுக்கு மேல் நிறைவேற்றியதில்லை. அவ்வாறு இருக்க ஜான் 650 குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றி கின்னஸ் சாதனைபடைத்துள்ளார். 

இதை கின்னஸ் உலக சாதனை அமைப்பு அமைப்பு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தற்போது, கின்னஸ் உலக சாதனை படைத்த ஜான் சீனாவுக்கு அவரது ரசிகர்கள் மட்டுமின்றி உலகின் பல்வேறு தரப்பினரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.