ஒரு நாளைக்கு 8 கிளாஸ் தண்ணீர் குடிப்பது அவசியமா? ஆய்வில் வெளியான தகவல்

#Health
Keerthiat month's ago

பொதுவாக, பல்வேறு நிலப்பகுதிகளில் மனிதர்கள் பரந்து வாழ்ந்து வருகின்றனர். இதன் தாக்கம் நமது அன்றாட வாழ்வில் வெளிப்படும். தவிர, மழை, குளிர் பருவகாலங்களில் இதன் தீவிரம் இன்னும் அதிகப்படும். 

இந்த நிலையில், ஒரு மனிதன் ஒரு நாளைக்கு தனக்கு தேவையான தண்ணீரை எவ்வளவு எடுத்து கொள்வது என்பது பற்றிய புதிய ஆய்வு ஒன்று நடந்து அதன் முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. 

இங்கிலாந்தில் உள்ள அபர்தீன் பல்கலை கழகத்தில் பேராசிரியராக இருப்பவர் ஜான் ஸ்பீக்மேன். இவரது தலைமையில் ஆய்வாளர்கள், மனிதர்களுக்கு ஒரு நாளைக்கான தண்ணீர் தேவை பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

இதன்படி, 23 வெவ்வேறு நாடுகளை சேர்ந்த, பிறந்து 8 நாட்களேயான குழந்தை முதல் 96 வயது வரையிலான முதியவர்கள் வரை 5,604 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இதன் முடிவில், நாளொன்றுக்கு ஒருவருக்கு 1.5 முதல் 1.8 லிட்டர் தண்ணீரே போதும் என தெரிய வந்துள்ளது. 

இது, நாளொன்றுக்கு 2 லிட்டர் என இதற்கு முன் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட குறைவாகும்.  ஒரு மனிதர் ஆரோக்கியமுடன் மற்றும் நீரேற்றம் பெற்றவராக இருக்க வேண்டுமென்றால், ஒவ்வொரு நாளும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது மருத்துவர்கள் மற்றும் வல்லுனர்களின் பரிந்துரை. 

எனினும், ஒரு நாளைக்கு 8 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற பரிந்துரை மிக அதிகம் என சமீபத்திய இந்த ஆய்வானது தெரிவிக்கின்றது. வளர்சிதை மாற்றத்திற்கு அதிகம் தண்ணீர் தேவைப்படும் மக்கள் பொதுவாக அதிக தண்ணீர் குடிக்க வேண்டிய தேவை உள்ளது. 

அவர்களது உடல் வெகுசீக்கிரம் தண்ணீரை உட்கிரகித்து கொள்கிறது. இதேபோன்று, சூடான மற்றும் அதிக உயரங்களில் வசிப்போர், தடகள வீரர்கள், கர்ப்பிணிகள், தாய்ப்பால் ஊட்டும் பெண்களுக்கு தண்ணீர் அதிகம் தேவை. ஏனெனில் அவர்களது உடலும் அதிக அளவு நீரை, தேவைக்கு பயன்படுத்தி கொள்கிறது என அறிக்கை தெரிவிக்கின்றது. 

ஆய்வின்படி, இதுபோன்ற சமயங்களில் ஆண்கள் சராசரியாக நாள் ஒன்றுக்கு 4.2 லிட்டர் தண்ணீரும், பெண்கள் சராசரியாக நாள் ஒன்றுக்கு 3.3 லிட்டர் தண்ணீரும் குடிக்கின்றனர் என தெரிவிக்கின்றது. பேராசிரியர் ஜான் கூறும்போது, நாம் குடிக்க வேண்டிய தண்ணீர் அளவு என்பது, நாம் எடுத்து கொள்ளும் மொத்த தண்ணீர் அளவுக்கும், உணவின் வழியே நமக்கு கிடைக்கும் தண்ணீர் அளவுக்கும் உள்ள வேறுபாடே ஆகும். 

இந்த ஆய்வில், மக்களின் உணவு அளவு அவர்களிடமே கேட்டு பெறப்பட்டது. ஏனெனில், எவ்வளவு சாப்பிடுகிறோம் என சிலர் உண்மையைகூறுவதில்லை. அதனால், தவறான மதிப்பீடு ஏற்படுகிறது. அதன் தொடர்ச்சியாக, தேவையான தண்ணீரின் அளவும் கூடுதலாக இருக்க வேண்டும் என நாம் தவறாக மதிப்பீடு செய்ய வழி ஏற்படுகிறது என கூறுகிறார். 

நாம் உண்ணும் பல வகை உணவிலேயே தண்ணீர் கலந்துள்ளது. அதனால், சாப்பிடும்போதே அதிக அளவிலான தண்ணீர் எடுத்து கொள்ளப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார். இதனால், தண்ணீர் குடிப்பது என்பது ஒவ்வொருவருக்கும் அவரது தேவைக்கு ஏற்ப மாறுபடுவது ஆய்வில் இருந்து தெரிய வந்துள்ளது.