இந்த சங்கராஷ்டமி நாளில் இவரை இப்படி வழிபட்டால் பட்ட கடன் காணாமல் போகும்

Kesariat year ago

ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி நாட்களில் விசேஷமாக பைரவருக்கு பூஜைகள் நடத்தப்படுகிறது. அதிலும் இந்த மார்கழியில் வரும் தேய்பிறை அஷ்டமியை சங்கராஷ்டமி என்கிற விசேஷ பெயருடன் பூஜிக்கப்படுகிறது. சிவபெருமானுக்கு உகந்த திங்கட்கிழமையில் இந்த சங்கராஷ்டமி வந்துள்ளதால் பட்ட கடன் எல்லாம் காணாமல் போக நாம் செய்ய வேண்டிய எளிய பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம் வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

சங்கராஷ்டமியில் பைரவருக்கும், சிவபெருமானுக்கும் நாம் செய்யும் பூஜைகள் இரட்டிப்பான பலன்களை நமக்கு அள்ளிக் கொடுக்கும். நாளை ராகு கால வேளையில் சிவன் கோவிலுக்கு சென்று அங்குள்ள மூலவரையும், பைரவரையும் வணங்கி வந்தால் நமக்கு வேண்டிய வரங்கள் அத்தனையும் அப்படியே கிடைக்கும் என்பது நம்பிக்கை. நாளை திங்கட்கிழமை காலை ஏழரை மணி முதல் ஒன்பது மணி வரையிலான காலகட்டம் ராகு காலம் உள்ளது.

சங்கராஷ்டமியில் சிவ பெருமான் உலகில் வாழும் அனைத்து ஜீவ ராசிகளுக்கும் படி அளப்பாதாக ஐதீகம் உண்டு. இதனை சந்தேகிக்கும் பார்வதி தேவி ஒருமுறை ஈசனை சோதிக்க நினைத்தார். உண்மையிலேயே இவர் அனைத்து ஜீவராசிகளுக்கும் படி அளப்பது எப்படி? என்பதை அறிந்து கொள்ள ஒரு விஷயத்தை செய்யத் துணிந்தார்.

எறும்பு ஒன்றை உன்ன உணவேதும் அன்றி ஒரு இடத்தில் பூட்டி வைத்துவிட்டார். இதற்கு எப்படி படி அளக்கப் போகிறார்? என்கிற சந்தேகம் இருந்தது. அஷ்டமி முடிந்ததும் சிவபெருமானிடம் பார்வதி தேவி எல்லா ஜீவராசிகளுக்கும் உண்மையிலேயே நீங்கள் படி அளந்து விட்டீர்களா? என்று கேட்டார். அதற்கு சிவபெருமானும் ஆம் எல்லா ஜீவராசிகளுக்கும் படி அளந்து விட்டேன் என்று கூறினார். சிவபெருமான் தன்னிடம் வசமாக மாட்டிக் கொண்டார் என்று எண்ணிய பார்வதி தேவி எறும்பை பூட்டி வைத்த இடத்திற்குச் சென்றார்.

அங்கு பார்த்தால் அவருக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது. எறும்பு ஒரே ஒரு அரிசியை சாப்பிட்டுக் கொண்டிருந்தது. எல்லா ஜீவராசிகளும் பசியார கூடிய இந்த நல்ல நாளில் நாம் நம்மால் முடிந்த உயிர்களுக்கு பசியை ஆற்றி அன்னதானம் செய்து வந்தால் நிச்சயம் நம்முடைய ஏழேழு சந்ததியும் பசி, பட்டினி இன்றி பஞ்சமில்லா வாழ்வு வாழ்வு வாழ்வார்கள்

மேலும் இந்நாளில் ஒரு கைப்பிடி அரிசியை சிவபெருமான் கோவிலுக்கு கொண்டு செல்லுங்கள். அங்கு உள்ள சந்நிதியில் ஒரு வெள்ளி, பித்தளை அல்லது செம்பு பாத்திரத்தில் பச்சரிசியை வைத்துவிட்டு பூஜை முடிந்ததும் பின்னர் அதனை எடுத்து வீட்டுக்குக் கொண்டு வந்து வீட்டில் நீங்கள் சமைக்கும் சாப்பாட்டு அரிசியில் சேர்த்து விடுங்கள். இதனால் எப்போதும் உணவிற்கு பஞ்சமில்லாத நிலை ஏற்படுமாம்.

மேலும் சிவன் அல்லது சொர்ணாகர்ஷண பைரவர் படத்தை வைத்திருந்தால், படத்திற்கு கீழே ஒரு சிறிய சிவப்பு துணியில் கொஞ்சம் மிளகுடன், பச்சை கற்பூரத்தை நுணுக்கி சேர்த்து ஒரு மூட்டையாக கட்டி வைத்து இருக்க வேண்டும். இப்படி செய்வதால் வீட்டில் செல்வ மழை பொழியும் என்பது நம்பிக்கை. பட்ட கடன் தீர நாளை காலையில் ராகு கால வேளையில் பைரவருக்கு புனுகு, அரகஜா போன்ற அபிஷேகப் பொருட்களை வாங்கிக் கொடுப்பது சிறப்பு!

அதேபோல சிவனுக்கு பால், பன்னீர், இளநீர் போன்ற பொருட்களை அபிஷேகத்திற்கு வாங்கிக் கொடுப்பது சிறப்பு! மேலும் எல்லா கடன்களும் நிவர்த்தியாகும் படி வேண்டிக் கொண்டு ஒரு சிவப்பு துணியில் 27 என்கிற எண்ணிக்கையில் மிளகுகளை மூட்டையாக கட்டி எள் தீபம் ஏற்றுவது போல தீபம் ஏற்ற வேண்டும். இவ்வாறு செய்வதால் பைரவருடைய அருள் கிடைத்து கடன் எல்லாம் தீரும் என்பது நம்முடைய நம்பிக்கையாக இருந்து வருகிறது. எனவே நாளைய நாளை தவறவிடாமல் பைரவர் மற்றும் சிவபெருமானின் அருளைப் பெற்றுக் கொள்ளலாமே!