கின்னஸ் சாதனை பெற்ற உலகின் மிகச்சிறிய துப்பாக்கி - ரூ. 5 லட்சத்திற்கு ஏலம்!

Keerthiat month ago

5 லட்சத்திற்கு ஏலம் போன இந்த துப்பாக்கியின் எடை 19.8 கிராம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இந்த துப்பாக்கியின் பெயர் C1ST ஆகும். C1ST துப்பாக்கி ஆனது சுவிஸ் வாட்ச் மேக்கிங்கில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. நகைகளிலும் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்த இரண்டு தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி இந்த சிறிய துப்பாக்கி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கியின் சக்தியானது 1 ஜூல் அளவுக்கும் குறைவாக இருப்பதால், இத்துப்பாக்கி மூலம் ஒருவரின் உயிரை எடுப்பது கடினம் ஆகும். எடுத்துக்காட்டாக ஒருவரை துப்பாக்கி மூலமாக கொல்ல வேண்டுமானால், சிறிய தோட்டா ஒன்று மண்டை ஓட்டின் பலவீனமான பகுதியில் நெருங்கிய தூரத்தில் இருந்து அடிக்கப்பட வேண்டும். இந்த துப்பாக்கி குறைந்த அளவு சக்தியை பெற்றுள்ளதால் இதன் மூலம் காயங்களை வேண்டுமானால் ஏற்படுத்த முடியும், உயிரை பறிக்க முடியாது என கூறப்படுகிறது.

உலகின் மிகச்சிறிய ரிவால்வர் இது ஆகும். இது 'சுவிஸ் மினி கன்' என்றும் இதனை அழைக்கிறார்கள். மற்ற துப்பாக்கிகளைப் போலவே இதனை சுடலாம், ஆற்றல் மட்டுமே குறைவு. மேலும் இந்த துப்பாக்கி உலகின் மிகச்சிறிய ரிவால்வர் என கின்னஸ் உலக சாதனையில் இடம் பெற்றுள்ளது. இத்துப்பாக்கியின் நீளம் 5.5 செ.மீ மற்றும் அகலம் 1 செ.மீ ஆகும். இந்த ரிவால்வரின் C1ST துப்பாக்கி ஆனது தோல் உறையுடன் வருகிறது. இதில் மொத்தம் 48 தோட்டாக்கள் உள்ளன. 24 தோட்டாக்கள் துப்பாக்கியிலும், மற்ற 24 தோட்டாக்கள் தனியாகவும் வருகிறது.

இதனை அக்கால 'கௌபாய்' கெட்டப்பில் இருப்பது போல, துப்பாக்கி உறையில் தோட்டாக்களை வைத்திருக்கும் வகையில் உருவாக்கி இருக்கிறார்கள். இந்த துப்பாக்கி தங்க வடிவிலும் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளனர். முன்னதாக இதே போல மிக சிறிய துப்பாக்கி ஒன்றினை சுவிஸ் நாட்டை சேர்ந்த விஞ்ஞானி உருவாக்கி உள்ளார். அவர் பெயர் பால் ஏரார்ட் ஆகும். தீக்குச்சி அளவே உள்ள துப்பாக்கியை உருவாக்கி சாதனை படைத்தார்.

2.23 மி.மீ அகலம் கொண்ட இந்த துப்பாக்கி 2 இன்ச் நீளமும் கொண்டதாகும். இந்த துப்பாக்கியின் மொத்த எடை 0.006 அவுன்ஸ் ஆகும். சுவிஸ் நாட்டில் இருக்கும் யார் வேண்டுமானாலும் இந்த துப்பாக்கியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதன் விலை 4,500 ஸ்விஸ் பிராங்க் ஆகும். ஜேம்ஸ்பாண்ட் 007 படத்தில் வரும் துப்பாக்கி போல இருக்கும் இந்த துப்பாக்கியை சுவிஸ் நாட்டு மக்கள் பலரும் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.