மீண்டும் இணையும் கமல்-விஜய்சேதுபதி கூட்டணி இயக்குனர், தயாரிப்பாளர் யார் தெரியுமா?

Nilaat month's ago

உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது உலகம் முழுவதும் இந்த படம் ரூ.400 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை செய்தது என்பதும் தெரிந்ததே. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘விக்ரம்’ படத்தில் இணைந்து நடித்த கமல் ஹாசன் மற்றும் விஜய் சேதுபதி மீண்டும் ஒரு திரைப்படத்தில் இணைந்து நடிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

கமல்ஹாசன் தற்போது ’இந்தியன் 2’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடித்ததும் அவரது 233 வது படத்தை எச் வினோத் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் கமல்ஹாசன் நாயகனாகவும் விஜய் சேதுபதி முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் வெளிவந்த தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. கமல்ஹாசன், விஜய் சேதுபதி, வினோத் ஆகிய மூவரும் இணையும் இந்த கூட்டணி மீண்டும் ‘விக்ரம்’ போன்ற சாதனை படத்தை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.