‘விக்ரம்’ படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிடத் தடை - சென்னை நீதிமன்றம் உத்தரவு

#Tamil-Cinema
Prasuat month ago

கமல்ஹாசன் நடித்துள்ள ‘விக்ரம்’ படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிடத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திரைப்பட இயக்குநா் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகா் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம். இந்தத் திரைப்படம் வருகிற ஜூன்-3ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் கமல்ஹாசனுடன் நடிகா்கள் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் உள்ளிட்டோா் நடித்துள்ளனா். சிறப்பு தோற்றத்தில் சூா்யாவும் நடித்துள்ளாா். இந்தப் படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டா்நேஷனல் தயாரித்துள்ளது.

இந்நிலையில் விக்ரம் திரைப்படத்தை இணையதளங்களில் சட்ட விரோதமாக வெளியிட தடைவிதிக்கக் கோரி ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் சாா்பில், ‘அதிக பொருள்செலவில் இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே சட்ட விரோதமாக இணையதளங்களில் இப்படம் வெளியானால் பெரும் நஷ்டம் ஏற்படும். அதனால், இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட தடை விதிக்க வேண்டும்’ என்று வாதிடப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி சி.சரவணன், விக்ரம் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்தாா். இந்த வழக்கிற்கு பிஎஸ்என்எல்., ஏா்டெல், ஜியோ உள்ளிட்ட இணையதள சேவை நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வருகிற ஜூலை 1 ஆம் திகதிக்கு தள்ளி வைத்தாா்.