பொறுமையாக இருங்கள்! விசாரணைகள் இன்னும் முடியவில்லை:  பொலிஸ் மா அதிபர்

#Investigation #Police
Pratheesat day's ago

பொரளை அனைத்து புனிதர்களின் தேவாலய வளாகத்தில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் இதுவரை 14 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பிலான அனைத்து ஆதாரங்களையும் திரட்டி மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் மா அதிபர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை எனவும் விசாரணைகள் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

விசாரணையின் முன்னேற்றம் குறித்த மேலதிக அறிக்கைகள் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று மாதங்களாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

எனவே இந்த வழக்கிலும் அனைத்து நபர்களையும் அந்தஸ்து பாராமல் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு புலனாய்வுப் பிரிவுகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 11ஆம் திகதி பொரளை அனைத்து புனிதர்கள் தேவாலய வளாகத்தில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரதான சந்தேகநபர் நேற்று முன்தினம் (ஜன. 13) புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரிக்க அனுமதிக்கப்பட்டார்.

சம்பவ இடத்தில் வெடிகுண்டு வைக்க 13 வயது சிறுவன் பயன்படுத்தப்பட்டதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்