AVM புரடெக்ஷன்ஸ் நிறுவுனர் மெய்யப்ப செட்டியார் நினைவு நாள் 12-8-21

#India #Cinema
Kesariat year ago

இயற்பெயர் - ஆவிச்சி மெய்யப்ப செட்டியார்

சினிமா பெயர் - ஏ வி மெய்யப்ப செட்டியார்

பிறப்பு - 28 - ஜுலை - 1907

இறப்பு - 12 - ஆகஸ்ட் - 1979

பிறந்த இடம் - காரைக்குடி - தமிழ்நாடு

சினிமா அனுபவம் - 1934 - 1973

பணி- தயாரிப்பாளர் - இயக்குநர்

துணைவி - அலமேலு மெய்யப்பன் - ராஜேஸ்வரி மெய்யப்பன்

குழந்தைகள் - ஏ.வி.எம்.பழனியப்பன் (மகன்-இறப்பு), லக்ஷ்மி (மகள்-இறப்பு), வள்ளி (மகள்-இறப்பு), சரஸ்வதி,- முத்து -ருக்மணி (மகள்கள்), ஏ.வி.எம்.முருகன் (மகன்-இறப்பு), ஏ.வி.எம்.குமரன், ஏ.வி.எம்.சரவணன், ஏ.வி.எம்.பாலசுப்ரமணியன் (மகன்கள்), மீனா வீரப்பன் (மகள்)

பெற்றோர் - ஆவிச்சி செட்டியார் - லக்ஷ்மி ஆச்சி

இயல், இசை, நாடகம் எனும் முப்பெரும் இலக்கியத்தை உள்ளடக்கியது தமிழ் சினிமா. அதன் மூலம் சமூகத்தில் நிலவி வந்த அறியாமையை, கதாபாத்திரங்களின் வசனங்களாலும், பாடல்களாலும் சமூக சீர்திருத்த கருத்துக்களை வலுவாக இடம் பெறச் செய்து, பல மொழிகளில் ஏராளமான படங்களை தயாரித்து, தமிழனின் பெருமையை வட இந்தியா வரை கொண்டு சென்று வெற்றி கண்ட தயாரிப்பாளர்களில் முதன்மையானவர் ஏ.வி.மெய்யப்ப செட்டியார். அவரின் 113வது பிறந்தநாளில் அவரது மகன்களில் ஒருவரான தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன், தனது தந்தையை பற்றி நெகிழ்ந்து தினமலர் இணையதளத்திற்கு அளித்த சிறப்பு பேட்டி இதோ...

எதிலும் துல்லியம்

உலகமெல்லாம் பரவியுள்ள தமிழ் மக்கள் அனைவரும் AVM என்று மூன்றெழுத்தை இசையுடன் பார்த்ததும் எங்கள் தந்தை ஏவிஎம்மும், அவர் எடுத்த படங்களும் நினைவுக்கு வரும். அவரை பற்றி நினைத்தாலே மெய் சிலிர்க்கும். அவர் எங்களுக்கு பொருளையும் புகழையும் கொடுத்தார். என்பதற்காக மட்டும் அல்ல, அவர் வாழ்வு பலரும் பின்பற்றத்தக்கது என்பதற்காக.

 எதுவாக இருந்தாலும் துல்லியமாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவர். எந்த விஷயத்திற்காகவும் சமரசம் ஆகாதவர். எங்களது படமாக இருந்தாலும் திருப்தி இல்லாமல் வெளியில் போக கூடாது. மக்களுக்கு பிடிக்குதோ, இல்லையோ நமக்கு திருப்தியாக இருக்க வேண்டும் என சொல்வார்.

உதாரணத்திற்கு களத்தூர் கண்ணம்மா படமான சமையத்தில், அதே கதையை வேறு ஒருவர் படமாக எடுத்தனர். நடிகர்கள் மட்டும் தான் வேறு, வேறு. ஆரம்பத்தில் எங்களுக்கு இது தெரியவில்லை. நாளாக நாளாகத்தான் தெரிந்தது. படத்தை வேகமாக முடித்து ரிலீஸ் செய்யலாம் என எண்ணி படத்தை போட்டு பார்த்தோம். நிறைய காட்சிகளை மாற்ற சொல்லிவிட்டார். இதனால் அந்தப்படம் முன்னாடி வந்துவிடும், நம்ம படம் நான்கு வாரம் தள்ளிப்போகும் என்றோம். அதனால் என்ன? மகாபாரதம், ராமாயணம் திரும்ப திரும்ப எடுக்கிறார்கள். இருந்தாலும் மக்களுக்கு எதற்காக போகிறார்கள். அந்தப்படத்தை பற்றி கவலைப்படாதீர்கள், நம்ம படம் நன்றாக வரணும் மட்டும் எண்ணுங்கள் என்றார். அதேப்போன்று ‘கடவுளின் குழந்தை’ என்ற அந்தப்படம் முன்பே வெளியானது. ஆனாலும் எங்கள் படத்தை பற்றி தான் இப்போதும் பேசுகிறார்கள். அப்போது தான் தெரிந்து கொண்டேன், சின்ன விஷயமோ, பெரிய விஷயமோ, எதுவாக இருந்தாலும் துல்லியமாக இருக்க வேண்டும் என்று.

நேரம் தவறாமை

அதேப்போன்று நேரம் தவறாமை என்பது அவர் உடன் பிறந்தது. எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டும் என்று திட்டமிடுவார். சொன்ன நேரத்தில் சொன்ன தேதியில் இதை முடிக்கணும் என எதிர்பார்ப்பார். புரியவில்லை என்றாலும் மீண்டும் சொல்லிக் கொடுப்பார். ஆபிஸ் பையன் கூட ஒரு தகவல் சொன்னால் அதை கூட ஏற்றுக் கொள்வார். எல்லோரின் கருத்துக்களையும் உள்வாங்கி கொள்வார்.

 அப்பாவின் பலம்

அந்தக்காலத்திற்கு கதைக்காக தான் நடிகர்கள் இருந்தனர். இதனால் நடிகர் விஷயத்திலும் யார் யாரை நடிக்க வைக்கலாம் என எல்லோரிடமும் ஆலோசனை கேட்டு, இறுதியில் இவரை நடிக்க வையுங்கள் என்பார். இரவு தூங்கும் போது கூட தலையணை பக்கத்தில் கதையை வைத்து கொண்டு தான் தூங்குவார். தூக்கம் வரவில்லை என்றால் அதை படித்து பார்த்துவிட்டு, இந்த இடத்தில் இந்த காட்சி வேண்டுமா என இயக்குனரிடம் ஒரு வேண்டுகோளாக வைப்பார்.

 AVM saravanan

 அவரின் பலமே கதையும், எடிட்டிங்கும் தான். படத்தொகுப்பில் அவரே அமர்ந்து அந்த வேலையை செய்வார். இயக்குனர் பாலசந்தர் கூட அப்பாவிடம் நிறைய கற்றுக் கொண்டேன் என்பார். என்ன தான் பணம் போட்டு படம் எடுத்தாலும் கூட செலவு பண்ணியதை நினைக்க கூடாது, படம் நன்றாக வர வேண்டும் என எண்ணி, மக்கள் பார்வையில் ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து எடிட் செய்வார். இதுபோன்று அவரின் ஒவ்வொரு விஷயத்திலும் நாம் நிறைய கற்றுக் கொள்ளலாம்.

தன் தொழிலுடன் குடும்பம், அரசியல், நட்பு என்று எதையும் கலக்காதவர். காந்தி மேல் பக்தியும், காமராஜர் மேல் அன்பும் கொண்ட காங்கிரஸ்காரர். ஆனால் எந்தக் காரணம் கொண்டும் தன்னை அரசியல் சார்புள்ளவராக காட்டிக் கொள்ளாதவர். நாம் தொழில் செய்பவர்கள் நமக்கு அரசியல் கூடாது என்று எங்களுக்கு அறிவுரை கூறுவார். மற்ற கட்சி தலைவர்களுடன் நல்ல நட்புடன் பழகுவார்.

இறக்கும் சமயத்தில் கூட...

அவர் உடல் நிலை பாதித்து மருத்துவமனையில் படுத்திருந்தார். எல்லோரும் வந்து பார்த்துவிட்டு போனார்கள். என்னை அழைத்து 'சரவணா பாத்ரூமில் வீணாக எரியும் விளக்கை அணை' என்றார். சற்றுநேரத்தில் அவரது உயிரும் பிரிந்தது. எப்போதும் எதையும் வீண் செய்யக்கூடாது என்பது அவர் கொள்கை. அவரின் இறுதிச் சொல்லும் அதுதான். பணத்தை செலவு செய்யலாம், ஆனால் வீணாக்க கூடாது என்பார்.