'ஏமன் நாட்டில் 1.6 கோடி பேர் பட்டினியில் உள்ளனர்': ஐ.நா தகவல்!

#UN
Keerthiat day's ago

ஏமன் நாட்டில் நிலவி வரும் பஞ்சத்தின் காரணமாக 1.6 கோடி மக்கள் பட்டினியில் தவித்து வருவதாக ஐக்கிய நாடுகள் அவையின் உணவு கவுன்சில் கவலை தெரிவித்துள்ளது.

ஏமன் குடியரசு, மேற்கு ஆசியாவில், அரேபிய தீபகற்பத்தின் தெற்கு முனையில் அமைந்துள்ளது.

உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஏமன் நாட்டில் கடந்த சில வருடங்களாக நிலவி வரும் பஞ்சம் தற்போது உச்சம் தொட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அவையின் உணவு திட்டத்தின் கீழ் அண்டை நாடுகளின் உதவியால் அந்நாட்டிற்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது உணவுதிட்டத்திற்கு போதிய நிதி இல்லாததால் அக்டோபர் மாதம் மக்களுக்கு வழங்கப்படும் உணவிற்கான நிதி குறைக்கப்பட உள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

மார்ச் 1 அன்று ஸ்வீடன் மற்றும் சுவிட்சர்லாந்து இணைந்து நடத்திய ஒரு மெய்நிகர் உறுதிமொழி மாநாட்டில், ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸ் இந்த ஆண்டு ஏமனுக்கு 3.85 பில்லியன் டாலர்கள் நிதி தேவைப்படுவதாக வேண்டுகோள் விடுத்திருந்தார்.

எனினும் 1.7 பில்லியன் டாலர்கள் மட்டுமே நிதியாக கிடைக்கும் என உறுதியானதால் ஏமன் நாட்டிற்கு உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏமன் நாட்டில் நிலவி வரும் வறுமையின் காரணமாக 1.6 கோடி மக்கள் பட்டினியை சந்தித்து வருவதாகவும், அவற்றைக் களைய உலக நாடுகள் உதவ முன்வர வேண்டும் எனவும் ஐ.நா வேண்டுகோள் விடுத்துள்ளது.